சென்னை, பிப்.–
2030ம் ஆண்டிற்குள் 33% மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:–
‘‘தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து காலநிலை மாநாட்டை சிறப்பாக நடத்தி வருகிறது.
2022-ம் ஆண்டு, முதலாவது காலநிலை உச்சி மாநாட்டிலேயே, இந்தியாவின் ‘நெட் ஜீரோ’ இலக்கை 2070-ம் ஆண்டுக்கு முன்பே, தமிழ்நாடு அடைந்துவிடும் என்று நம்பிக்கையுடன் நான் சொன்னேன்! நான் சொன்னது சரிதான் என காட்டுவது போல இந்த மாநாடு நடைபெறுகிறது!
அதுமட்டுமல்ல, நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ளவும், தேவைப்படக்கூடிய விஷயங்களில் Improve செய்து கொள்ளவும் தான் இந்த மாநாடு. அதிகரித்து வரும் வெப்பநிலை, அதீத மழைப்பொழிவு, புயல், வறட்சி வெப்ப அலை - இப்படி எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் உலகம் முழுவதும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதுவும், தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலங்களுக்கு காலநிலை மாற்றம் என்பது எங்கேயோ நடக்கும் சம்பவம் கிடையாது! நமக்கு அது அன்றாட நிகழ்வாக அமைந்திருக்கிறது. நாம் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அந்த வகையில், நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடமும், நிறுவப்பட்ட சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக் ஆற்றல் உற்பத்தியில், இந்தியாவிலேயே நான்காவது இடமும் பெற்று, வளர்ந்து வருகின்ற மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இ–பஸ் பயன்பாடு அதிகரிப்பு
நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்ததைவிட, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அளவு, குறுகிய காலத்திலேயே 77 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. போக்குவரத்து மூலமாக ஏற்படும் கார்பன் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த இ–பஸ் பயன்பாட்டை அதிகரித்து கொண்டு வருகிறோம். இப்போதைக்கு, மொத்தம் 380 இ-பஸ்கள் சென்னையில் இயக்கப்படுகிறது. 7 ஆயிரத்து 738 சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 2030ம் ஆண்டிற்குள் 33 சதவிகித பேருந்துகளை மின்சாரப் பேருந்துகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்வாகனங்களுக்கு 2027 வரை சாலை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை கார்பன் சமநிலையாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம். காலநிலை மாற்றம் என்பது எங்கோ நடக்கும் நிகழ்வு அல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுதான். அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த மாநாட்டில், முக்கியமான சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.
இனி வரும் காலங்களில், அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையுடன் இணைந்து செயல்படுத்தும் விதமாக பட்ஜெட் உருவாக்கப்படும்.
நமது நாடு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், கார்பன் உமிழ்வுகளை குறைக்க, தேசிய அளவில், தீர்மானிக்கப்பட்ட சில பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டது போல், நம் மாநிலத்தின் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க, 2030-க்குள் செயல்படுத்தவேண்டிய மாநில அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றை இலக்குகளாக கொண்டு செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்.
வரும் காலங்களில் தொழிற்சாலை களும், அரசு நிறுவனங்களும் இணைந்து, பசுமைத் தொழில்நுட் பங்களில் முதலீடு செய்து, உமிழ்வுகளைக் குறைக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை நடவடிக்கைக்குமுக்கியத்துவம் அளித்து செயல்படவும், இளைஞர்கள் காலநிலைத் தலைவர்களாகவும், தூதுவர்களாகவும் உருவெடுக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நம்முடைய திராவிடமாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், நமக்கு சமூகநீதி ஒரு கண் என்றால், காலநிலை நீதி மற்றொரு கண்! எனவே, காலநிலை மாற்றத்தை நாம் அனைவரும் இணைந்து எதிர்கொள்வோம்! இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.