மிகச்சிறந்த சாதனை பெண்மணிகளைப் பற்றி எழுத விரும்புகிறேன். வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
"எங்க மாநிலத்தில் நிறைய சாதித்த பெண்கள் இருக்காங்க, அவங்கள பத்தி எழுதறியா"? என் தம்பி கேட்டவுடன் எனக்கு சற்று சுவாரசியம் கூடியது.
"சொல்லுப்பா, எழுதிடலாம்" என்றேன். எத்தனையோ மிக நல்ல மனிதர்கள் மக்களால் அடையாளம் காணப்படாமல் போய்விட்டார்கள்.
தற்பெருமை கொள்ளாது, புகழ்ச்சியை விரும்பாது பலரும் மனித நேயத்துடன் மக்களுக்கு உதவி வந்துள்ளார்கள்.
தற்போதைய மீடியாக்கள், டெக்னாலஜி தொலை, அலை பேசி இல்லாமலேயே எத்தனை எத்தனையோ விதமாக மக்களுக்கு நன்மை செய்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.
"காலத்தின் செய்த உதவி சிறிதேனும்
ஞாலத்தின் மாலப் பெரிது".
உதவி எப்படிப்பட்டதாயினும், தேவையின் போது செய்யப்படுமாயின்
உலகில் அதுவே பெரிய விசயமாக கருதப்படும் என்று வள்ளுவர் சொன்னது போல்,
பெரிய செயல் சிறிய செயல் என்றில்லாமல் பாராட்டப்பட வேண்டும்.
ஆந்திராவில் மிகச்சிறந்த பெண்மணி வரிசையில், நான் தெரிந்து கொண்ட பெண்மணி 'டொக்க சீதம்மா' வை பற்றி எழுதுகிறேன்.
அவன் சொல்ல சொல்ல ஆச்சரியத்தில் கண்கள் விரித்தேன். வியந்தேன். இதோ மாதரசி ஸ்ரீமதி டொக்க சீதம்மாவை பற்றி சொல்கிறேன் வாருங்கள்.
ஆந்திராவில் மிகச்சிறந்த மனிதர்கள் வரிசையில் 'டொக்க சீதம்மா' என்கிற பெண்மணியும் ஒருவர். மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்.
இவரைப் பற்றி நிறைய கேட்டும் படித்தும் தெரிந்து கொண்டேன். தானத்தில் சிறந்தது 'கண்தானம்', 'அன்னதானம்', என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள்.
பாரதி பார்வையில் தானம் என்றில்லா விட்டாலும் "ஆங்கோர் ஏழையை எழுத்தறிவித்தல்" என்பது போல் நான் உங்களுக்கு அன்பு கலந்து அன்னமிட்ட அன்ன பூரணியான
ஸ்ரீமதி 'டொக்க சீதம்மா' அவர்களை பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சிறந்த பெண்மணிகள் பற்றி தெரிந்து கொள்வதும், அவர்களை மீண்டும் நாடறிய செய்யவேண்டும் என்பது என் ஆசை.
பெண்ணிற்கு பெண் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கட்டுமே!
இதன் மூலம் ஆந்திராவில் மிகவும் பிரபலமான சிறந்த பெண்மணி 'ஸ்ரீமதி டொக்க சீதம்மா' அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
சீதம்மா அவர்கள் 1841 ஆம் ஆண்டு கிழக்கு கோதாவரி மாவட்டம், மண்டபகாவில் ஒரு வசதியான பிராமண குடும்பத்தில், நரசம்மா மற்றும் அனுப்பிண்டி பவானி சங்கருக்கும் மகளாக பிறந்தார்.
பெற்றோர்கள் செய்த தவப்பயனே இந்த குலமகள் பிறந்திருக்கிறாள்.
அருமை பெருமையாக வளர்ந்தார். அப்பாவின் அன்பிற்குரிய மகளானார். சிறுவயதிலேயே தாயை இழந்த இவர் தந்தையுடன் அவரது பணிகளில் உதவி புரிந்து வந்தார்.
சீதம்மாவின் தந்தை பவானி சங்கர் அன்னதானம் செய்து வந்தார். நேரம் காலம் பார்க்காது பசித்தோற்கு புசிக்க கொடுத்து பசி தீர்த்தார்.
அவர் ஏழைகளுக்கு உணவளிக்கும் இந்த தொண்டினால் அவரை 'புவ்வண்ண சாஸ்திரி' என்ற புனைப்பெயரால் அன்புடன் அழைக்கப்பெற்றார்.
தந்தையின் தொண்டு மகளுக்கும் பிடித்து போயிருந்தது. சீதம்மாவும் தந்தையிடமிருந்து அன்னதானத்தின் மகிமையை அறிந்திருந்தார். தானும் அவ்வாறே தொடரவும் விரும்பினார்.
சீதம்மா பெரிய செல்வந்தரும் விவசாயியுமான 'டொக்கா வெங்கட ஜோகண்ணா' என்பவரை மணந்தார். மனமொத்த தம்பதிகளான இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டதில் ஐயமில்லை.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கணவருடன் இணைந்து அன்னதானம் செய்து வந்துள்ளார்.
பசித்தால் சீதம்மா இருக்கிறார், கவலை இல்லை என்று ஏழைமக்கள் கவலையில்லாது வயிறார சாப்பிட்டனர்.
கணவரது ஆதரவு சீதம்மாவிற்கு இடையறாது அன்னதானம் செய்வதற்கு பேருதவியாக அமைந்தது.
பசியோடு இருக்கும் யாரும் எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சீதம்மா தானே சமைத்து அன்பாக பரிமாறுவார். அது அந்த உணவின் ருசியிலும் கலந்திருக்கும்.
சீதம்மா வீட்டு உணவை சாப்பிடுவோர் அந்த உணவை ஒரு தெய்வீக பிரசாதமாகவே நினைத்து உண்பார்கள். அத்தனை சிறந்ததாக நினைத்தார்கள்.
இன்னும் ஒருபடி மேலே சொல்லப்போனால் அவர் கையாலே சாப்பிட்டபின் பலர் உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபட்டதாகக்கூட சொல்வதுண்டு.
அன்னதானத்தில் மிகவும் மதிப்பும், மரியாதையும், ஆரோக்கியத்தையும் வைத்திருந்தார் சீதம்மா.
மிகவும் பிரபலமான போதிலும் எந்த ஒரு பகட்டும் படாடோபமும் இல்லாதிருந்தார்.
இவரது பெருமைகள் நாடு முழுவதும் தெரிய ஆரம்பித்தது. பலரும் அதிசயித்தனர்.
ஏழாம் எட்வர்ட் மன்னர் சீதம்மாவை தனது ஆண்டு விழாவில் பெருமை படுத்தவேண்டி அழைத்திருந்தார்.
மன்னர் பெருமைப் படுத்த நினைத்திருக்கிறார் என்றால் இவரது செயல் எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும்?
ஆனால் அப்பேர்ப்பட்ட அழைப்பை சீதம்மா அவர்கள் மறுத்து விட்டார்.
தான் பெருமைக்காகவோ, பாராட்டப்படுவதற்காகவோ அதை செய்யவில்லை என்பதில் உறுதியாய் இருந்தார்.
பின்னர் ராஜா டெல்லிக்கு அம்மையாரை அழைத்து வருமாறு சென்னை தலைமைச் செயலகத்திற்கு செய்தி அனுப்பினார்.
அதை அறிந்த சீதம்மா அவர்கள், அந்த அழைப்பையும் பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டார்.
டொக்க சீதம்மா அவர்கள் இதை ஒரு தொண்டாக மட்டுமே செய்து வருகிறேன். எனக்கு விளம்பரப்படுத்திக் கொள்வது வேண்டாம் என்று நிராகரித்தார். யாருக்கு வரும் இந்த நல்ல எண்ணம். ஏழைகளுக்கு உணவளிப்பதில் தலைசிறந்து விளங்கினார்.
பிறகு அவரை கவுரவப்படுத்தும் விதமாக
அரசவை செயலர் அம்மையாரின் போட்டோவை அவர் அனுமதியோடு மன்னரிடம் அளித்தார்.
மன்னர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அம்மையாருக்காக தனிப்பட்ட முறையி்ல் நாற்காலி செய்து அதில் அந்த படத்தை வைத்து பெருமை படுத்தினார்.
எத்தனை பெருமை தரக்கூடிய விஷயம்.
ஔவை சொன்னதுபோல்
"ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்
என்னோவறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது"
என்று நம் வயிறானது
ஒருநாளும் பசிக்காமலும் இருக்காது. இரண்டு வேளைக்கு சேர்த்தும் உண்ணாது. நம் கஷ்டமும் புரியாது. "உன்னோடு வாழ்தல் அரிது" என்கிறார் ஔவை பிராட்டி. அப்படிப்பட்ட வயிற்றுப்பசியை போக்கும் ஒரு மாபெரும் தொண்டு செய்து வந்துள்ளார் சீதம்மா அவர்கள்.
நமக்கு நன்றாக தெரியுமே 'பசி வந்தால் பத்தும் மறக்குமே'. அரை நாழிகை பொறுக்க முடியாதே!
தன் சந்ததிகள் பணியை தொடரச் செய்துவிட்டு தன் வயதான காலத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை ஏழை எளியவர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு ஒரு வாடகை மாட்டு வண்டியில் வாரணாசி புறப்பட்டார்.
செல்லும் வழியில் ஒரு குடும்பம் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் தான் எடுத்த 'பிட்சை' பொருட்களைகளை கொண்டு சமைத்து அவர்கள் பசியாற்றினார். எப்போதும் மற்றவர்கள் பசியை போக்க வேண்டும் என்ற சிந்தனைதான் சீதம்மாவிற்கு.
இந்திய முன்னாள் லோக்சபா சபாநாயகர் திரு பால யோகி தனது லண்டன் பயணத்தின் போது அரசு மாளிகையில் 'தென்னிந்தியாவின் மிகவும் தொண்டு செய்யும் பெண் ' என்ற தலைப்பில் டொக்கா சீதம்மாவின் உருவப்படத்தை பார்த்து பெருமிதம் கொண்டார்.
நம் நாட்டிற்குத் தான் எத்துனை பெருமை அம்மையாரின் தொண்டு.
பாரதம் திரும்பியதும் 1999 ஆம் ஆண்டு அமலாபுரத்தில் அவரது வாரிசுகளை சந்தித்தார். அவர்களும் அன்னையின், பாட்டனாரின் அன்னதானப் பணிகளை தொடருவதில் மகிழ்ச்சி அடைந்தார்.
அதைத் தொடர்ந்து அவரது சிலை திறக்கப்பட்டது. கோதாவரியின் துணை நதியான 'வினாதேயா'வில் ஒரு நீர்வீழ்ச்சிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் நாணயவியல் மற்றும் தபால் தலை சங்கம் டொக்கா சீதம்மா அவர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிட்டது.
தர்மத்திலும் நல்ல சிந்தனையும் தொண்டுணர்வும் கொண்ட இத்தகைய அர்ப்பணிப்பு ஆத்மாக்கள் கொண்டவர்கள் பற்றி, பள்ளி பாடங்களில் இடம்பெறவேண்டும். பசியின் கொடுமையும், அன்னதானத்தின் மகிமையும் மாணவர்களும் அறிய செய்ய வேண்டும்.
இல்லை என்போர்க்கு உதவ வேண்டும். பசி என்று வந்தோருக்கு புசிக்க தர வேண்டும் என்று மாணவ கண்மணிகளுக்கு சொல்லித் தரவேண்டும்.
என் தம்பிக்கும் நன்றி சொன்னேன். ஒரு சிறந்த பெண்மணியைப் பற்றி நான் தெரிந்து கொள்ள உதவியதற்கு.
நாமும் நம்மை சுற்றியுள்ள நல்ல விஷயங்களை, செய்திகளை, மனிதர்களை தெரிந்து கொள்ள வேண்டும். மதிக்க தெரிய வேண்டும்.
தரும காரியங்கள் செய்வது மின்விளக்கு வாங்கிக் கொடுத்து அதில் தன் பெயரை பெரிதாக எழுதிவிட்டு வெளிச்சத்தை மறைப்பதல்ல.
பாராட்ட அல்ல, பயன் பெற என்பதை உணர வேண்டும். நிறைய பெண்மணிகளின்
பெருமைகளை தொடர்ந்து எழுத விரும்புகிறேன்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எந்த மாதிரியான கஷ்டப்பட்டார், பாடுபட்டார், சமாளித்தார் என்பதை படித்தால் இன்னும் நிறைய நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. நாற்பது வருடத்திற்கும் மேலான தொண்டாயிற்றே!
நம்மால் தற்போதைய சூழலில் எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தும் ஒரே ஒரு வாரம் விருந்தினரை சமாளிக்க முடியாமல் போகிறது.
டொக்க சீதம்மா அம்மையாரை வணங்கி மகிழ்வோம்.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்.