வழக்கறிஞர் சி.பொன்ராஜ்
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அடையாளத்தை உருவாக்கி இயங்கிவரும் சிறந்த எழுத்தாளர் அமரர் தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப் பிரசுரத்தின் வழியாக வெளி வந்திருக்கும் ஒருபக்கச் சிறுகதைகளின் தொகுப்பு வழக்கறிஞர் சி.பொன்ராஜ் அவர்களுடையது.
நாற்பத்திரண்டு கதைகள் இவற்றுள் இரண்டு கதைகள் திரும்பத் திரும்ப வந்துள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பார்த்தால் 40 கதைகள் அத்தனையும் அழகான, எளிமையான வாசிப்போரை இடையூறு செய்யாத கதைகள்.
அடிப்படை அறம், மனித நேயம், தேவையில்லாமல் பொய் பேசக்கூடாது, இயல்பாகப் பழகுதல் வேண்டும், உள்ளதை உள்ளவாறு பேசவேண்டும், நடக்கவேண்டும், அன்பு ஒன்றே யாவற்றுக்குமான தீர்வு, நம் எண்ணப்படிதான் எல்லாமும் நிகழும் நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆகிறோம் என்று பைபிள் உணர்த்துவதுபோன நீதிமிகுந்த கதைகள் இத்தொகுப்பின் சிறப்பாக அமைகின்றன.
இத்தொகுப்பின் தலைப்பு உள்ளங்கவரும் ஒருபக்கக் கதைகள் என்பது மட்டுமின்றி இவை வாசிப்போர் உள்ளம் உணரும் வகையிலும் எழுதப்பட்ட கதைகள். ஒரு படைப்பின் நோக்கம் சக மனிதனை அனுசரணையாகப் பார்ப்பது, அன்போடு பார்ப்பது, அக்கறையோடு பார்ப்பது என்பதைத் தாண்டி எதுவுமில்லை. அதை எளிமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் பொன்ராஜ்.
ஒவ்வொரு கதையிலும் எங்கோ ஓரிடத்தில் மின்னலென ஒரு தெறிப்பு இருக்கிறது. இன்னும் சிறந்த கதைகள் இவரிடமிருந்து வரும் என்பதற்கான நம்பிக்கை ஒளி அஃது. மனிதன் வாழ்வதும் அவனுக்கான வாழ்க்கை (அது எப்படியிருந்தாலும்) என்பதும் ஒரு முறைதாம். அதை ஒரு முறையோடு வாழவேண்டும் என்பதும்தாம். அதை இக்கதைகளின் வழியாக உணர்த்துகிறார். அறிவுறுத்தல் இல்லை.. கட்டாயம் இல்லை.. பதற்றம் இல்லை.. இப்படித்தான் செய்கிறாயா? உனக்கும் இப்படித்தாம்.. யார் செய்தாலும் நமக்கும் அப்படித்தாம் என்கிறார். விதை போட விதையும் வினை விதைக்க வினையும் என்பதான சூத்திரம்தாம். அழகாக நகர்த்திப்போகிறார் ஒவ்வொரு கதையையும்.
அவசரமான உலகில் இக்கதைகளை அவசரமின்றியும் நேரம் வீணாகாமலும் வாசிக்கத் தந்திருக்கிறார்.
அம்மாவின் அன்பில் தொடங்குகிறது இத்தொகுப்பு. செக்யூரிட்டி என்றால் அவருக்கு ஒன்றும் தெரியாது என்கிற கர்வத்தை உடைக்கிறது அதிர்ச்சி எனும் கதை. அநியாயத்தின் விளைச்சலைப் பேசுகிறது என்னய்யா ஞாயம் என்கிற கதை. சமத்து கதையில் எளிமையாக ஒரு தீயப் பழக்கத்தைத் திருமணம் செய்யப்போகிற ஆணிடமிருந்து அகற்றுகிறது ஜோதிகா எனும் பாத்திரம் சமத்து கதையில். இயலாதவருக்கு உதவாமல் விலகினால் அது அப்படியே திரும்பி வந்து உணர்த்தும் என்பதைத் தண்டனை கதை ஒரு நாயின் வழியாகக் காட்டுகிறது. முன்கை நீண்டாம் முழங்கை நீளும் நாம் கொடுத்தால் அவர்களும் கொடுப்பார்கள். அவ்வளவுதான் விதை எனும் கதை. வேறொரு விதத்தில் இதே உண்மையைப் பெரியவன் கதை உணர்த்துகிறது. ஆணும் எதையும் கற்றுக்கொள்வது குடும்பத்திற்கு நலமானது என்பதை அவசியம் கதை ஒரு சம்பவத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறது. சீரியல் ஒரு தொற்றுதான். எப்பவும் ஆபத்தானது.
இந்நூலாசிரியர் வழக்கறிஞர் என்பதால் எல்லாவிடங்களிலும் நீதியைச் சரியாகப் பார்க்கிறார். கப்பங்கிழங்கு விற்பவரும் (கதை 15) தள்ளு வண்டியில் தக்காளி விற்பவரும் (கதை எண் 20) தாங்கள் பொருள்களை நிறுத்துத் தருகிற தராசு நீதிமன்றத்தில் நீதிதேவதையின் கையில் பிடித்திருக்கும் தராசிற்குச் சமமானது என்கிற உரையாடல் அற்புதமான தெறிப்பு. இப்படி அடிப்படையில் உழைத்துப் பிழைப்பவனிடம் சரியான நியாயம் இருக்குமானால் நீதிமன்றம் செல்லவேண்டிய தேவையில்லையே? என்கிற அறத்தை ஆழமாகப் பேசும் கதைகள் இவை. உதவி கேட்டுப் போகிற இடத்தில் சாதியைக் கேட்டதும் தன்மானத்துடன் உதவி வேண்டாம் என்று வெளிவரும் சடையன் போன்றோரால்தாம் இவ்வுலகில் இன்னும் மழை பொழிகிறது. யாரையும் தெரியாமல் குறைத்து மதிப்பிடக்கூடாது. அப்படி மதிப்பிட்டால் மதிப்பிழப்போம் என்பதை ஈகை கதை அழகாக உணர்த்துகிறது.
சொல்லில்தான் பலருக்கும் தேவையில்லாத கௌரவம் கொட்டிக் கிடப்பதாக எண்ணி சிதைகிறார்கள் உள்ளம். கிழவா என்கிற கதை இந்த முரணைக் காட்சிப்படுத்துகிறது. தீர்வு என்கிற கதை நல்ல உத்தி. உழைப்பின் உறுதியை உப்பு விற்பவர் கதை சொல்கிறது. தேர்ந்த அலுவலரின் திறனை உணர்த்தும் கதை ஒற்று. பெரிய கதையாக எழுதவேண்டிய கதை இஃது. ஈன்றவரின் தலைப்பெழுத்து எவ்வளவு முக்கியம் என்பதையும் அதைப் பண்பாடாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். ஆர்வம் என்கிற கதையில் நாயகி உணர்த்தும் உத்தி சற்றே வித்தியாசமானது. முடிவு கதைபோன்று இன்னொரு கதையும் இன்றைய அரசியல் அவலத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துகிறது.
40 கதைகளும் எளிமையான சொற்களில் வாசிப்போரைக் கவர்கிறது. சில கதைகள் கனக்கின்றன. சில கதைகள் சுருக்கென்று குத்துகின்றன.சில கதைகள் விளைவுக்கு விளைவுதான் என்கின்றன. சில கதைகள் அமைதியாக அன்பைப் பேசுகின்றன. எல்லாக் கதைகளும் நன்றாக உள்ளன. வாசித்துப் பாருங்கள்.
-ஹரணி,
தஞ்சாவூர்.