tamilnadu epaper

குட் மார்ன்ங்

குட் மார்ன்ங்


உமா ஒரு கேட்டட் கம்யூனிடி ஃப்ளாட்டில் தனியாக வாழ்ந்து வந்தாள். அவளது மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆனவன். அவ்வபொழுது அம்மாவிற்கு வேண்டிய பணம் அனுப்புவான். வருடம் ஒரு முறை குடும்பத்துடன் வந்து அம்மாவுடன் 15 நாட்கள் தங்கி மகிழ்வான். மற்றபடி உமாவிற்கு வெறுமைதான்.  


ஆனால் அவள் மிகவும் சுதந்திரமான தன்னிறைவுள்ள பெண். அனைவருடனும் புன்சிரிப்புடன் கலந்துரையாடுவாள். தன்னால் முடிந்த உதவியை சுற்றியுள்ளவர்களுக்கு செய்வாள். கம்யூனிடி திருவிழாவில் முழு மனதுடன் கலந்து தன்னால் ஆன வேலைகளை சிறப்புடன் செய்வாள்.


காலையில் வரும் பால்காரன், பேப்பர்காரன், பூக்காரி எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் “குட் மார்னிங்” சொல்லி நலம் விசாரிப்பாள். தனக்கு உதவிக்கு வரும் துணை தேவதைக்கும் காபி, டிபன், மதிய உணவு என்று மகிழ்ச்சியுடன் தந்து வயிற்றை நிறைப்பாள். அவர்களுக்கு வேண்டிய பண உதவியையும் செய்வாள். ஆக மொத்தத்தில் அவள் ஒரு ரௌண்டட் இண்டிவிஜுவள் என்று சொல்லலாம்.  


யாரும் அவள் முகத்தில் சிரிப்பின்றியோ சுரத்தின்றியோ பார்த்ததே இல்லை. பிறர் தவறுகளை கூட பெரிது படுத்தாமல் அவர்களை தனியே அழைத்து அறிவுரை கூறுவாள். தங்கள் பிரச்சனைகளை வந்து அலசும் நண்பர்களுக்கு தனக்கு தெரிந்த அறிவுரையை சொல்லுவாள்.


இவ்வாறு மகிழ்ச்சியுடன் உமாவின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.  


ஒரு ஞாயிறு பேப்பர்காரன் உமாவின் இரண்டாவது மாடி வீட்டை நோக்கி “குட் மார்னிங்” என்று சொல்லி நிமிர்ந்தபோது உமா வழக்கமாக நிற்கும் இரண்டாவது மாடி பால்கனியில் இல்லை. கதவும் திறந்து கிடந்தது. அவளது சிரித்த முகத்தையும் உற்சாகமான ‘குட் மார்னிங்’கையும் ஒரு மெதப்புடன் எதிர்பார்க்கும் பேப்பர்காரன் சுரேஷிற்கு சிறிது குழப்பமாக இருந்தது.  


தனது காலை பேப்பர் வேலையை சிறிது தள்ளி வைத்து விட்டு கிடுகிடுவென மாடியேறி உமா வீட்டினுள் நுழைந்தான். டைனிங் டேபிள் அருகில் தரையில் உமா வலிப்பால் அவதி பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான். உடனே தனது பைக் சாவியை அவள் கையில் திணித்தான். சிறிது அவளது வலிப்பு குறைந்தது. அவளது முகத்தில் தண்ணீரைத் தெளித்து ஆசுவாசப் படுத்தினான்.  


பின்னர் முதல் மாடியிலிருந்த டாக்டர் ராமனுக்கு போன் செய்து வரவழைத்தான். அவரும் வந்து உமாவை பரிசோதித்து உடனே தனது காரிலேயே ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று சேர்த்து கவனித்துக் கொண்டார்.  

திருப்தியடைந்த சுரேஷ் தன் மீதி வேலையை கவனிக்க சென்றான்.  


அடுத்த நாள் உமாவை பார்க்க சென்றபோது அவள் நன்றாக இயல்பு நிலைக்கு வந்திருப்பதை பார்த்து மகிழ்ந்தான். அப்போது உமா அவனிடம் “நீ எப்படி சரியான நேரத்திற்கு என் வீட்டிற்கு வந்தாய் சுரேஷ்?” என்று கேட்டாள். அதற்கு சுரேஷின் பதில் சிந்திக்க வைப்பதாக இருந்தது. “தினம் காலையில் உங்கள் “குட்மார்னிங்"குடன்தான் எனது நாள் ஆரம்பிக்கும். நம்மையும் ஒரு மனிதனாக மதித்து சிரித்த முகத்துடன் காலை வணக்கம் சொல்கிறார்களே இந்த மேடம்” என்று எண்ணி மகிழ்வேன். “உங்களது குட் மார்னிங் எனக்கு ஒரு பெரிய கிக் ஸ்டார்ட் மேடம். அந்த உற்சாகத்துடனேயே நான் முழு நாளையும் சந்தோஷமாக கழித்து விடுவேன்” என்றான். “அந்த குட் மார்னிங்தான் நேற்று உங்கள் உயிரையும் காத்திருக்கிறது” என்றான் சுரேஷ்.


நம்மையறியாமல் நாம் செய்யும் நல்ல காரியங்கள் பல நமக்கே ஏதோ ஒரு வகையில் உதவியாக மாறுகின்ற விந்தையை நான் நேற்று பார்த்தேன் என்றெண்ணிய வண்ணம் சுரேஷை பார்த்து மீண்டும் புன்னகைத்தாள் உமா.



-ரமா ஸ்ரீனிவாசன்