tamilnadu epaper

மாயவேட்டை

மாயவேட்டை


புத்தகம் ; மாயவேட்டை

ஆசிரியர் :திருமதி லீலா ராமசாமி 

பதிப்பகம் : புஸ்தகா வெளியீடு

விலை :ரூ120


சமீபத்தில் நான் படித்த திருமதி லீலா ராமசாமி எழுதிய மாயவேட்டை ஒரு விறுவிறுப்பான துப்பறியும் /மர்மக்கதை. புத்தகத்தை கையில் எடுப்பவர்கள் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள், அத்தனை விறுவிறுப்பு. 


அடுத்தடுத்து காணாமல் போகும் பிணங்கள். அதன் பின்னணியை காவல்துறை ஆய்வாளர் சிபி விசாரிக்கும் போது, ஒரு மர்ம உருவம் உலவுகிறது.. மனிதனா, மிருகமா என்று உணர முடியாத வகையில்.. அந்த உருவத்தால் கொல்லப்படும் மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள்.. குழம்பும் இன்ஸ்பெக்டர் சிபியின் மாயவேட்டை தொடர்கிறது.. 


விறுவிறுப்பான இவற்றின் பின்னணியில்.. ஆன்மீகம் ,சித்தர் வரவு. வித்தியாசமாக செய்யப்படும் ஆராய்ச்சியின் விளைவுகள்.. என கதை வித்தியாசமான கோணத்தில் விறுவிறுப்பாய் பயணிக்கிறது. இயற்கையான மரணத்தை வெல்ல பிணத்துடன் ஆராய்ச்சி செய்யும் மனிதர்.. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் முயற்சியில் சித்தர்கள் கூறும் மூலிகையை பயன்படுத்த நினைக்கிறார். இறுதியில் இன்ஸ்பெக்டர் சிபி தன் மாய வேட்டையை எவ்வாறு முடிக்கிறார்? பிணங்களை கடத்துவது யார்? மாயமிருகம் கொல்லப்பட்டதா? அதன் பின்னணி என்ன? இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? எதற்காக செய்கிறார்கள் என்ற முடிச்சுகள் இறுதி அத்தியாயங்களில் அவிழ்கிறது .


நல்ல விறுவிறுப்பான மர்மகதை, அதுவும் கதையை விறுவிறுப்புடன் மேம் போக்காக சொல்லாமல், அழுத்தமான சித்தர்களின் கருத்துக்களை புகுத்தி, வித்தியாசமான ஒரு மர்ம நாவலை தந்திருக்கிறார், ஆசிரியர் லீலா ராமசாமி. சித்தர்கள் கருத்து கதைக்கு வலு சேர்க்கிறது. இயற்கை நிகழ்வான மரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக செய்யப்படும் எதுவும் மனித குலத்திற்கு, உலகத்திற்கு,கேடு விளைவிக்கக் கூடியது என்ற சித்தர்கள் கருத்து அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது.


அவருடைய வசனங்கள் பல இடங்களில் மனதை கவர்கிறது ..


"இறந்த உடலில் மீண்டும் உயிர் வந்தால் அது பைசாசமாக இருக்கும்" என்று சித்தர் கூறும் இடத்தில்.. 

"கரந்த பால் முலை புகா..

கடைந்த வெண்ணெய் மோர் புகா.." என்ற சிவவாக்கியரின்  

பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.


சஞ்சீவி மூலிகையை குறிப்பிடும்போது. இறந்தவரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மூலிகை பற்றி ராமாயணம் பேசுகிறது.. போர்க்களத்தில் மயங்கிவிட்ட இலக்குவனை, அனுமன் சஞ்சீவி மூலிகையை மலையோடு பெயர்த்து எடுத்து வந்து காப்பாற்றினான் என்ற வரிகளை எடுத்தாளும் ஆசிரியர், ஒரு உயிரைக் காபந்து பண்ணக் கூடிய யாவும் சஞ்சீவி என்றுதான் சொல்லப்படும் என்கிறார். குறிப்பிட்ட நாட்களில்,குறிப்பிட்ட நாழிகையில் மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அற்புத மூலிகை.. சட்டென எல்லோர் கண்களிலும் புலப்படாது என்பது போன்ற அரிய தகவல்களை அங்கங்கே பதிவிட்டிருக்கிறார். 


"மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு.. இயற்கையின் நியதி.. அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்" என்பது போன்ற கருத்தை சித்தர் கூறுவதாக கூறுகிறார். சித்தர்கள்

மூலம் விளக்கும் பல விஷயங்கள் ஆசிரியர் சமூகத்தில் மேல் கொண்டுள்ள அக்கறையை தெள்ளத் தெளிவாய் விளக்குகிறது .


அதேபோல இன்ஸ்பெக்டர் சிபி மற்றும் அவர் தந்தைக்கு இடையே உள்ள உரையாடலில் மகன் சோர்வடையாமல் இருக்க ஊக்கமளிக்கும் வகையில் வேட்டையின் தன்மையை பற்றி குறிப்பிடும் போது

"காடு என்பது பயங்கர பிரதேசம் எந்த புதரில் இருந்து எந்த காட்டு மிருகம் பாயுமோ? காட்டுக்குள் வேட்டையாடச் செல்வது திகிலான விஷயம் என்றாலும், ஏன் வேட்டைக்கு போகிறார்கள்? எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே அலாதி இன்பம்"

என்ற உதாரணத்தைக் கூறி மகனை மாய வேட்டையை தொடர ஊக்கப்படுத்தும் இடம் அருமை. 


"இயற்கைக்கு மாறாக செய்வது எதுவும் கேடில் விளையும்" என்ற கருத்தை அழுத்தமாக வசனங்களால் வற்புறுத்திச் சொல்கிறார் கதாசிரியர். மொத்தத்தில் விஷயங்கள் சொரிந்துள்ள விறுவிறுப்பான நாவல்.



 தி.வள்ளி

திருநெல்வேலி