tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-23.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-23.05.25


  அய்யாறு ச.புகழேந்தியின் 'பிழைப்பு' என்ற சிறுகதையில் லஞ்சம் வாங்கிய குமாரின் கதை பரிதாபமாக இருந்தது. நியாய வழியில் நடக்காதவர்களின் வாழ்வில் இப்படிதான் கஷ்டங்கள் வந்து சேரும் என்பதற்கு இந்த கதை நல்லதொரு எடுத்துக்காட்டு!


  'டபுள்ஸ்' என்ற வெ.நாராயணன் சிறுகதை எதிர்பாராத முடிவுடன் சிரிப்பாகவும் சிறப்பாகவும் இருந்தது. சரசாவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை அழகு பாக்யாவை, தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் தன் தம்பிக்கு மணம் முடித்த பெருந்தன்மையை நிச்சயம் பாராட்டதான் வேண்டும்.


  குங்குலியக்கலய நாயனார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது சிவ.முத்து லட்சுமணனின் கட்டுரை மூலம்தான் அவரது வரலாற்றை தெளிவாக அறிந்தேன்.


  ஜி.ஏ. பிரபா ஆன்மீகத் தென்றல் கட்டுரையில் இறைவனை அன்பு மூலம் அறிவதுதான் பக்தி என்பதை உணர்த்தியிருந்த விதம் சிறப்பு. 'எல்லா மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறது. இதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்' என்ற இவரது கருத்து மிகச்சரியானது.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் வீரன் சுந்தரலிங்கனார் வரலாறு திகில் நிறைந்த வீரவரலாறாக இருந்தது. 1799 செப்டம்பர் 8- ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடு மேய்ப்பவர்களை போல வேடமணிந்து வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப்போய், தீப்பந்தத்துடன் உள்ளேப் பாய்ந்து, அந்த வெடி மருந்து கிடங்கையே வெடிக்க வைத்ததுதான், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நடந்த முதல் தற்கொலைப்படை தாக்குதல் என்பதை அறியும்போது, தமிழர்களின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.


  புதுக்கவிதை பகுதியில் ஐந்து தேநீர் கவிதைகளை உற்சாகமாக பருகிவிட்டுப் பார்க்கிறேன் சுட சுட. 'உளுந்து வடை' என்ற கவிதையும் இருக்கிறது. நான் சென்னைக்கு வந்து மெதுவடை சாப்பிட்டுக்கொண்டே டீ குடிப்பதுபோல ஒரு உற்சாகம் ஏற்பட்டது. எல்லாவகையிலும் உற்சாகம் அளிக்கும் ஒரே நாளிதழ் என்றால் அது நம்ம தமிழ்நாடு இ.பேப்பர்தான்!



 -சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.