தினம் ஒரு கைப்பிடி முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் மூன்று முக்கிய நன்மைகளை படித்தேன். அப்படி சாப்பிடுவது எலும்புகளுக்கு நல்லது, இதயத்திற்கு நல்லது, புற்றுநோயைத் தடுக்கும் என்பதெல்லாம் சரிதான்; ஆனால் அது மணிப்பர்ஸ்க்கு நல்லதில்லையே!
ஹேமா வாசுதேவனின் 'அம்மாவின் அன்பு' என்ற சிறுகதையில் ரமாவின் தாயார், ரமாவுக்கு கல்லூரியில் சேர அனுமதி வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போராடியது பாராட்டுக்குரியது. அதுபோல ரமாவும் நன்றாக படித்து அந்தக் கல்லூரியிலேயே முதல்வரானாதும் பாராட்டுக்குரியதுதான்!
கொலையை செய்து மறைக்க முயன்ற மூவரும் விபத்தில் மரணமடைய, அந்த விபத்தின் அதிர்ச்சியில் கொலை செய்யப்பட்டவர் உயிர் பிழைக்க ஒரே ஆச்சரியம்தான். முகில் தினகரனின் 'மேலே ஒருத்தன் இருக்கான் நாராயணா!' சிறுகதையை படித்து நான் ஆச்சரியத்தில் அசந்துப்போனேன்!
கவி. வெண்ணிலவனின் 'காதலின் பொன்வீதியில்...' தொடர் மிகவும் சுவாரஷ்யமாக போகிறது. சந்தோஷ் சௌந்தர்யாவை கவிதையாலேயே மயக்கி வைத்திருக்கிறான். அடுத்து அலைபேசியை எடுத்த ருத்ர மூர்த்தி ருத்ரதாண்டவம் ஆடினாராயென்று அறிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
'சிவாயநம என்போம்...' என்ற ப.சரவணனின் கட்டுரை கதையை போல ஆவல் தருவதாக இருந்தது. 'சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர் என்ற கருத்தையும் சொல்லியது.
புதுக்கவிதை பகுதியில் இடம்பெற்ற முப்பதுக்கும் அதிகமான கவிதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதைக் கவர்ந்தது. அதிலும் புது டெல்லி ஆர். ஹரிகோபியின் 'யார் அந்த விஐபி?' என்ற கவிதை ஒரு நல்ல நகைச்சுவை விருந்தாக அமைந்து அசரடித்தது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.