tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-25.05.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-25.05.25


தமிழ்நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் 

அன்புநிறை வணக்கம்.

ஒரு குட்டிக் கதை...

ராத்திரி நேரம்...

ரயில் போய்க் கொண்டிருக்கிறது...

ஒரு கம்பார்ட்மென்ட்டில் 

நான்கே நான்கு பேர்கள் மட்டும்...

ஒரு பச்சை சட்டை ஆள்

ஒரு மஞ்சள் சட்டை ஆள்...ஒரு இளம் பெண்...ஒரு எண்பது வயது பாட்டி...

ராத்திரி நேரம்... ரயில் போய்க் கொண்டிருக்கிறது...

யாருமே எதிர் பாராத நேரத்தில் திடீரென்று 

லைட் அணைகிறது...

கும்மிருட்டு...

அந்த நேரத்தில் இச்ச் 

என்று முத்த சத்தம்.

அதைத் தொடர்ந்து பளார் என்று அறைகின்ற அடிச் சத்தம்... இந்த நேரத்தில் மீண்டும் லைட் ஒளிர்கிறது.

இப்போது நான்கு பேர் மனதிலும் ஒவ்வொரு மனவோட்டம்...

பாட்டி நினைத்தாள்

இப்படி: " இந்த ஆண்களே சுத்த மோசம்...லைட் ஆஃப் ஆன சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்த ரெண்டு பேருல எவனோ ஒருத்தன் இந்த சின்ன பொண்ணுட்ட வாலாட்டிருக்கான்...

அது பாரதி கண்ட புதுமைப் பொண்ணு போலிருக்கு...அவன் சேட்டை பண்ணினதும் 

பளார்னு அவன் கன்னத்துல ஓங்கி அறைஞ்சிட்டா.. சபாஷ்... சபாஷ்!"


அந்த இளம்பெண் என்ன நினைத்தால் தெரியுமா?


" இந்த ஆம்பளைங்களே சுத்த மோசம்... கரண்ட் போன சமயத்துல இந்த ரெண்டு பேருல எவனோ ஒருத்தன் இருட்டுல இந்த பாட்டியை என்னன்னு தவறா நினைச்சிட்டு அவள்ட சேட்டை பண்ணிட்டான்...

பாட்டி துணிச்சல் காரி போலிருக்கு...ஓங்கி அறைஞ்சி தூள் கெளப்பிட்டா...பிரமாதம்...பிரமாதம்..."


அந்த இரண்டு பெண்களும் இப்படி நினைத்து சந்தோஷம் காண பச்சை சட்டை ஆசாமி மனதுள் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்.

ஏன்னா அடி வாங்கி பாதிக்கப் பட்டவன் ஆயிற்றே...


" இந்த மஞ்சள் சட்டைக் காரனை அவன் ஏறும் போதே கவனிச்சேன்...

சுத்தமான வில்லங்கப் பார்ட்டின்னு...லைட்டு அணைஞ்சி போனதை சரியான சான்ஸ் னு

நினைச்சி, பக்கத்துல இருந்த பருவப் பொண்ணை கிஸ் அடிச்சி தப்பு பண்ணிட்டான்... அவா 

இருட்டுல ஆளு யாருன்னு தெரியாம 

அவனேன்னு நெனச்சி 

என் கன்னத்துல ஓங்கி அறைஞ்சிட்டாளே...'

சோகத்தில் சுருங்கி, சோர்வாய் புழுங்கியவாறு நொந்து போயிருந்தான், அந்த பச்சை சட்டைபேர்வழி.

மஞ்சள் ஆசாமியோ...

உள்ளுக்குள் நமட்டு சிரிப்புடன் ஜாலியாக இருந்தான்.காரணம்

லைட் அணைந்து போன அந்த இருட்டு நேரத்தில் என்ன நடந்தது என்று அவனுக்கு மட்டுந்தான் தெரியும். 


உண்மையிலேயே அவன் வக்கிரப் புத்தி கொண்டவன் தான்...

விளக்கு அணைந்த அந்த கும்மிருட்டு நேரத்தில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற 

நம நமப்பு அவனுக்குள் 

அரித்தது. ஒரு மோசமான யோசனையில் அவன் உள்ளங் கைக்குள் இச்ச் என்ற முத்த சத்தத்தை அவனே எழுப்பிக் கொண்டு 

பக்கத்தில் இருந்த பச்சை சட்டைக் காரரை 

அறைந்து ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டார்.


வாசகர் கடிதம் பகுதிக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... புரிகிறது...!


அந்தக் கதையில் நடந்த சம்பவம் ஒன்று.

ஆனால் ஒவ்வொரு வரும் அவரவர் மனதின் குரலுக்கு தகுந்த படி ஊகித்துக் கொண்டனர். அவரவர் நினைப்புக்கு அவரவர் 

நியாயம் நிஜம்.

ஏற்கத் தக்கதும் கூட.

வாழ்க்கையும் இப்படித் தான் உண்மையில் இருந்து திரிந்து தெளிவின்மையே தெளிவென்று சித்தரிக்கப் பட்டு 

விநோத விளையாட்டாக சில நேரங்களில் விபரீத விளையாட்டாக ஆகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கும் தமிழ் நாடு இ பேப்பருக்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் ஒரு கேள்வி உங்களுள் எழுகிறது அல்லவா...?

இலவசமாக எளிதில் கிடைத்து விடுவதால் 

இ.பேப்பரின் உள்ளடக்க மதிப்பு முழு அளவில் நமக்குத் தெரிவதில்லை.

அதை முழு அளவில் 

பயன்படுத்தும் பாஸிட்டிவ் மனோபாவமும் பக்குவப் பொறுமையும் சரியான அளவில் இல்லை. இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்ற கேள்வியும் உங்களிடம் இருந்து வரலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து 

பரவசம் அடைந்து பூரணம் அடைந்து விட்ட மாதிரி திருப்தியில் கரைந்து போகும் வாழ்க்கை முறைக்குப் பழகிப் போய் விட்டோம் என்பது தான் உண்மை. 

அதி அதிகாலையில் 

நம் இல்லம் தேடி வந்து 

ஆஜராகி விடும் 

தமிழ்நாடு இ பேப்பரின் நேர்த்தியை 

வாழ்வியலுக்குத் தேவையான தகவல்களை தேடல் வேட்கையில் -- தாகத்தில் அள்ளி வழங்கி வரும் அற்புதத்தை இந்த சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது 

தமிழ்நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்களின் முக்கிய சமுதாய கடமை... இந்த சமூகத்தை பண்படுத்தும் -- மேம்படுத்தும் நுட்பங்கள் நமது கோரிக்கையில் --

விருப்பத்தில் மறை பொருளாக இழைந்துள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

ஒரு கோடி வாசக சொந்தங்களை இணைக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நோக்கமாகக் கொண்டு பயணிக்கும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் ராயல் சல்யூட் சொல்வதோடு நின்று விடாமல்,

' தலைக்கு ஐந்து பேர் '

என்று இலக்கு வைத்து 

ஒவ்வொரு வாசக சொந்தமும் அன்பின் ஆழத்தில் இறங்கி

இயங்கினால் போதும்... ஒரே நாளில் சாதித்து விடலாம்...

ஒரு கோடி இலக்கை!

முடியாதது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்ற உற்சாக வரியை உள்ளத்தில் நிரந்தரமாக பதிப்போம...

நித்தம் நித்தம் சாதிப்போம்.

சரித்திரம் படைப்போம்.


வாழ்க வையகம் 

வாழ்க வளமுடன் 

வாழ்க நலமுடன் 



-நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்