நூலின் பெயர்: சுந்தர பவனம்
ஆசிரியர் : தி.வள்ளி
வெளியீடு : நோஷன் பிரஸ்
பக்கங்கள் : 488
கிடைக்கும் இடம் : அமேசான் கிண்டில் தளங்கள், நோஷன் பிரஸ் ஸ்டோர்ஸ்.
புத்தக தேவைக்கு ; 99449-09487
ஆசிரியர் தி.வள்ளியின் "சுந்தர பவனம்" சமீபத்தில் ஒரு தோழி கொடுக்க படிக்க நேர்ந்தது. மிகவும் அருமையான கதை. சற்று பெரிய புத்தகம்.. 488 பக்கங்கள் 100 அத்தியாயங்கள். குடும்பக் கதை என்ற போதும் சற்றும் விறுவிறுப்பு குறையாமல் கதை செல்வதால், ஒரே மூச்சில் படித்து முடித்தேன். 1920 ஆரம்பிக்கும் கதை 2020ல் முடிகிறது..
இது ஒரு நூற்றாண்டு கதை. 5 ஐந்து தலைமுறைகளை கண்ட ஒரு மாளிகைதான் சுந்தர பவனம். ஒரு நூற்றாண்டின் கால மாற்றத்தை, கலாச்சார மாற்றத்தை, கதை மாந்தர்களின் மனதின் மாற்றத்தை கதைப்போக்கில் அழகாக கொண்டு செல்கிறார் ஆசிரியர். எந்த இடத்திலும் சற்றும் அலுப்பு தட்டவில்லை அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்ற விறுவிறுப்புடன் கதை நகர்கிறது.
ஐந்து பாகமாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நாவலின் முதல் 30 அத்தியாயங்கள், முதல் பாகமாக ,1920-30. காலகட்டத்தின் சரித்திர பதிவாக திகழ்கிறது .அந்தக் காலத்து கூட்டு குடும்பம், உறவுகளின் பிணைப்பு, உறவுகளை விட்டுக் கொடுக்காத தன்மை.. ஆகியவற்றை அழகுற விளக்குகிறது. 1920களில் கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் எவ்வாறு அரணாக அடுத்த தலைமுறைக்கு இருந்திருக்கிறார்கள்.. அறிவுரை சொல்வதிலும், அரவணைத்து செல்வதிலும், என்பதை சுவாரசியமாக விளக்கியுள்ளார். தனிப்பட்ட கருத்துக்கள் இல்லாமல் ஒரே தலைமையின் கீழ் மொத்த குடும்பமும் இயங்கியதை புரிந்து கொள்ள முடிகிறது.
விவசாயத்தை நம்பி இருந்த பெரிய பண்ணை, ஜமீன், குடும்பங்கள் மெல்ல, மெல்ல காலப்போக்கில் அதிலிருந்து வெளியே வந்து, அடுத்த தலைமுறைகள் படித்து, வேலை பார்க்க என வெளியிடங்களுக்கு இடம்பெயர்ந்த கால மாற்றம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
பேரை மட்டுமே அந்தஸ்தாய் தாங்கி நிற்கும் பழைய ஜமீன் மாளிகைக்குள் உட்புகுந்து அதன் வரலாற்றை பார்க்குங்கால், இத்தகைய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும் என்றுதோன்றுகிறது என்கிறார் ஆசிரியர்.
அந்தக் காலத்து சடங்கு, சம்பிரதாயங்கள், இக்கால தலைமுறை அறியாதது. எனவே அதை சற்று விவரமாக ஆரம்ப அத்தியாயங்களில் கொடுத்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. பழைய பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சரித்திர பதிவாக இந்நூல் அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் ஆசிரியர் கதையின் 5 பாகங்களில் முதல் பாகத்ததற்கு 30 அத்தியாயங்களை ஒதுக்கி இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உறவுகளுக்கிடையே இருந்த அழகான பிணைப்பு, காலப்போக்கில் எப்படி மாற்றம் காண்கிறது.. அக்கால மனிதர்களின் உழைப்புகள், அந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த மின் சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், அவை உட்பகுந்த காலகட்டங்கள் ஆகியவற்றை அழகாக கதையினூடே புகுத்தியுள்ளார்.
கதை ஆரம்பத்தில் முந்தைய தலைமுறை, அவர்கள் பெற்றோருக்கு கொடுத்த மரியாதை ,அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்ட மனப்பான்மை, தங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் அதிகம் இல்லாத காலகட்டம் அது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. காலப்போக்கில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஆன உறவு நட்பு முறையில் மாற, தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்கும் இளைய தலைமுறை, அவர்கள் கருத்துக்களை உணர்வுகளை ஏற்று, அதற்கேற்ப மாறும் முந்தைய மூத்த தலைமுறை என உறவுகளின் மாறுதல்களை இக்கதையின் வழிநெடுகே பார்க்க முடிகிறது.
மேலும் ஆசிரியரின் எளிய நடை மனதுக்கு நெருக்கமாக இருப்பதால் இக்கதையுடன் ஒன்ற முடிகிறது.
"சுந்தர பவனம்" என்னும் நாவல் ஒரு பெரும் கடல் என்றால் அதில் என்னை கவர்ந்த சில துளிகள்..
##ஒரு பெண்ணுக்கு ஆண் எதிரியாக வேண்டாம் திலகா.. பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரி. ஒரு ஆம்பளை செய்த தப்பை தன் பிள்ளைங்கறதுக்காக நியாயப்படுத்துவது ஒரு பொண்ணுதான். ஒருத்தன் கல்யாணமானவன் குழந்தை, குட்டி இருக்கிறவன் என்று தெரிந்தும் இன்னொருத்தி வாழ்க்கையை கெடுக்கிறாளே அவளும் பெண்தான்..
##வாழ்க்கை நாம நெனச்ச மாதிரியே அமைஞ்சு, நாம நெனச்ச மாதிரியே கடைசி வரை நடந்து முடிவதில்லை என்பது அனுபவப்பட்ட பிறகு தான் புரியுது..
## அகிலன்.. வீடு என்பது வெறும் செங்கலும் சிமெண்டும் என்று நீ சொல்றது நீ வாழ்கிற நாட்டுல உள்ளவங்களுக்கு பொருந்தும் ஆனால் இந்தியாவில் அப்படி இல்லப்பா வீடு என்பது ஒருவர் உயிரிலும் உணர்விலும் கலந்தது..
#இந்த பூமியோட மகிமையே, இந்திய மண்ணுடைய கலாச்சாரத்தின் பெருமையே, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதுதான்.
##பிள்ளைகளுக்காக வாழ்றத சுமையா நினைக்கல, சுகமா தான் நினைக்கிறாங்க பெரியவங்க. கடைசி காலம் வரைக்கும் பிள்ளைங்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்யத்தான் செய்றாங்க.
இவையெல்லாம் நான் ரசித்த சிறு துளிகளே. உறவுகளின் பாச மழைக்குள் நனைய நீங்கள் சுந்தர பவனத்துக்குள் நுழையுங்கள்.. மிகவும் அருமையான சரித்திர பதிவாக திகழும் இந்நூல் கண்டிப்பாக படிக்க வேண்டியது. நிறைய விஷயங்களை உள்ளடக்கிய உணர்ச்சிகரமான குடும்ப நாவல். படித்தபின் இந்நாவலின் தாக்கம் பல நாட்கள் என்னுள் இருந்தது. இந்நூல் பல விருதுகளைத் பெற என் வாழ்த்துகள். ஆசிரியர் மேலும் இதுபோல சிறந்த படைப்புகளை படைக்க என் வாழ்த்துக்கள்.
-சுவேதா ஏகாந்தலிங்கம்,
சென்னை.