இந்தியக் குடும்பங்களிடம் ரூ.452 லட்சம் கோடி தங்கம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.202 லட்சம் கோடி
Feb 13 2026
13
புதுடெல்லி, பிப். 11–
உலக அளவில் இந்தியாவில் தான் அதிக அளவில் மக்கள் தங்கத்தைக் கையிருப்பாக வைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 45% நகைகள் (அதாவது ரூ.202 லட்சம் கோடி) தமிழ்நாட்டு பெண்களிடம் இருப்பதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியக் குடும்பங்களின் இல்லங்களில் மட்டும் தற்போது 34,600 டன் தங்கம் உள்ளது. இது, அமெரிக்காவின் தேசிய தங்கக் கையிருப்பை விட அதிகமாகும்.
2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலை 90% ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பணத்தின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தங்கத்துக்கு நல்ல ‘கிராக்கி’ உருவானது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ‘மின்னல்’ வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, அதன் மதிப்பு 5 டிரில்லியன் டாலர் (ஒரு டாலரின் மதிப்பு இன்றைய நிலவரப்படி ரூ.90.60 காசு) என்ற அளவை எட்டியுள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான (ஜிடிபி) 4.125 டிரில்லியன் டாலரை விட அதிகம்.
இதன் காரணமாக, தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு ரூ.452 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக தனியார் வங்கி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய குடும்பங்கள் வளம் தற்போது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, 10 ஆண்டுக்கு முன்பு 1 சவரன் தங்கத்தின் விலை வெறும் ரூ. 26,343 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,25,368 ஆக அதிகரித்துள்ளது. தங்கம் என்பது மிகப்பெரிய அசையும் சொத்தாக உள்ளது. அந்த சொத்தின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வால், நகைகளை கையிருப்பில் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பங்களும்பெரிதும் பயனடைந்துள்ளன. புதிதாக தங்கத்தை வாங்கமலும், விற்காமலும் கூட இவ்வளவு பெரிய ஆதாயத்தை அடைந்துள்ளன.
உலக அளவில் இந்தியாவில் தான் அதிக அளவில் மக்கள் தங்கத்தைக் கையிருப்பாக வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவல் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள உலக பொருளாதார பார்வை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?