இரும்பு தகடு வைத்து ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை: சென்னையில் உ.பி இளைஞர் கைது
Sep 17 2025
40

சென்னை:
ஏடிஎம் இயந்திரத்தில் இரும்பு தகட்டை வைத்து நூதன முறையில் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய உத்திர பிரதேச சேர்ந்த இளைஞரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு, பாரி சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் உள்ளது. அந்த மையத்தில் நேற்று பணம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர்கள் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். மேலும், இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திற்கு விரைந்து இயந்திரத்தை பார்வையிட்டார்.
மேலும், ஏடிஎம் வாசல் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று இருந்த 3 நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றுள்ளார். அப்போது, அவர்களில் இருவர் தப்பி ஓடி நிலையில் ஒருவரை மட்டும் தனியார் நிறுவன ஊழியர் மடக்கி பிடித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சிவா (20). இவர் தப்பிச் சென்ற இருவருடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்திலுள்ள இயந்திரத்தில் பணம் வரும் இடத்தில் இரும்பு தகட்டை வைத்து மறைத்துள்ளனர்.
பின்னர் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்துக்குள் சென்று பணத்தை எடுக்க முற்பட்டு, பணம் வெளியே வராததால் ஏமாற்றத்துடன் வெளியேறியதும், இதனை நோட்டமிட்டு ஏடிஎம் மையத்திற்குள் சென்று இரும்பு தகட்டை எடுத்து, அங்கு வந்திருக்கும் பணத்தை திருடியுள்ளனர். இதையடுத்து, பிடிப்பட்ட சிவாவை ஜெ.ஜெ.நகர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட சிவா சிறையில் அடைக்கப்பட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?