உற்பத்தி, வேலைவாய்ப்பில் இந்தியாவிலே தமிழகம் முதலிடம்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
உற்பத்தி, வேலைவாய்ப்பில் இந்தியாவிலே தமிழகம் முதலிடம்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, பிப்–
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025–2026ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025–26, கடந்த ஐந்து ஆண்டிற்கான மாநிலத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை எடுத்துரைக்கிறது. இவ்வறிக்கை 10 அத்தியாயங்களில் பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு செயல்பட்டது என்பதை விரிவாக விளக்குகிறது.
இவ்வறிக்கையானது, நம் மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகளை விளக்குவதுடன், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையான தனிநபர் வருமானம் ஆகிய இரு இலக்குகளையும் அடைய கவனிக்க வேண்டிய பகுதிகளை யும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை, கொள்கை வகுப்பாளர்கள், வணிகம், தொழில்வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. பொருளாதார போக்குகளை ஆவணப்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால மேம்பாட்டு உத்திகளை வடிவமைப்பதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான கருவியாக செயல்படும்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த.உதயச்சந்திரன், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் அரசு செயலாளர்–மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் சஜ்ஜன் சிங் ரா சவான் மற்றும் நிதித்துறை துணை செயலாளர் சி.ஏ. ரிஷப், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2024-–25-ம் ஆண்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமிழ்நாடு 9.4 சதவீதம் பங்களிப்பை அளித்துள்ளது.உற்பத்தி துறையில் 14.74 சதவீத வளர்ச்சியை பெற்று இந்தியாவில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.மேலும், உற்பத்தி துறை வேலை வாய்ப்புகளில் நாட்டின் மொத்த தொழிற்சாலை பணியாளர்களில் தமிழ்நாடு 15 சதவீதத்துடன் முன்னணி பங்களிப்பாளராக விளங்குகிறது.
மின்னணு சாதனங்கள், ஜவுளி, தோல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த நிதியாண் டில் வணிக பொருட்கள் ஏற்றுமதி 52.07 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.தமிழ்நாட்டின் சராசரி வருமானம் 2024-–25-ல் ரூ.3.62 லட்சத்தை எட்டி, தேசிய சராசரியான 2.05 லட்சத்தை காட்டிலும் 1.77 மடங்கு அதிகமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் வழித்தட திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.2030-ல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு தகுந்த நிலையில் தமிழகம் இருக்கிறது.