எங்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம்: மாணிக்கம் தாகூர் விஜய்யுடன் கூட்டணி: நிர்வாகிகள் ஆவேசம்

எங்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம்: மாணிக்கம் தாகூர்  விஜய்யுடன் கூட்டணி: நிர்வாகிகள் ஆவேசம்


மதுரை, பிப். –


திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட 7 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்தாலும், அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இப்போதும் இதே கோரிக்கையை காங்கிரசார் கடுமையாக வலியுறுத்தி வந்தனர்.


இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் பங்கு என்பது தமிழபு நாட்டுக்கு ஒத்து வராது என்று நிராகரித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.


தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசை முறையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை பலமுறை பொதுவெளியில் மாணிக்கம் தாகூர் எழுப்பியிருக்கிறார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் காங்கிரசின் அதிகாரப்பகிர்வு கோரிக்கையை திமுக தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் தி.மு.க. அமைச்சரான ராஜ கண்ணப்பன், அவர்கள் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். கூட்டணியை நம்பி கட்சி நடத்த முடியாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. கடுமையாக எதிர்த்து விமர்சித்தார்.


இந்நிலையில் மதுரை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமை தாங்கினார். மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நடைபெற உள்ள 2026 தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.


இந்தக் கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின், மொத்தம் 7 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு மற்றும் அதிகாரப் பகிர்வில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தற்போதிருப்பதை விட அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்துவது மற்றும் மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது உள்ளிட்ட 7 தீர்மானங்களாகக் கொண்டு வரப்பட்டன.


திருப்பி அடிப்போம்


இதனைத்தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:


காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம். காங்கிரசை சாதாரணமாக நினைத்து பேசுகின்றனர். நீங்கள் (திமுக) செய்த பல தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை யென்றால் திருப்பி அடிப்போம். திருப்பி அதே வார்த்தையை பேசுவோம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்.


மரியாதை இல்லை


தி.மு.க.வின் பேச்சுவார்த்தைக்கு 70 நாளாக காத்திருக்கிறோம். தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதை எதிர்பார்க்கிறோம். சொத்து சுகம் கேட்கவில்லை, நான் கேட்பது மரியாதை மட்டும்தான். காங்கிரஸ் குறித்த தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சு வேதனை அளிக்கிறது. உண்மையாக பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரசாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்தவிவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். நாடாளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது.


இவ்வாறு அவர் பேசினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%