கல்லும் கதைப் பேசும்.!

கல்லும் கதைப் பேசும்.!


ஒருமலையில் வெட்டியெடுத்த 

இரு கற்கள்.. ஒன்றோடு ஒன்று பேசியதை நான் கேட்டேன்.!


ஒரு கல்.. படிக்கல்..

உள்ளே கருவறை கல்..

படிக்கல் பேசியதை

பாவலன் யான் கேட்டேன்!


என்னடா என்ன இது..

எல்லோரும் மிதித்திட

கண்ணீர் வருகிறதே..

என் கதை சோகக் கதை!


மனது வலிக்கிறது..

மழை வெயில் என்மீது

மனிதன் காலின் கீழ்..

மரண வேதனைகள்!


உள்ளே இருக்கும் கல்லே.. 

உன்னை கடவுள் என்றே

பாலூற்றி பூசை செய்து

பார்த்துக் கை கூப்பி..


எல்லோரும் வணங்கிடவே

பூ வைத்துப் பொட்டிட்டு

முன் விழுந்து பணிந்து

போற்றும்படி இருக்கின்றாய்!


கல்லிலே உன் நிலையோ

காண்பதற்கு பெரியது..

கடவுளே.. உன் வடிவம்

புண்ணியம் செய்தாயோ?


எனக்கும் உனக்கும்

இடையில் ஏன் வேறுபாடு?

உன்னை வணங்குகிறார்..

என்னையோ மிதிக்கின்றார்..!


உள்ளிருந்த கல் சிரிக்கும்..

உள்ள நிலை உரைக்கும்!

அன்றொருநாள் உளியொன்று.. 

ஓங்கி அடிக்கயிலே 

ஒரு அடிக்கே நீ விழுந்தாய்.!


படிக்கல்லாய் கிடக்கின்றாய்..

என்னைப் பார்! எனக்கு

எத்தனை அடிப் பட்டேன்!

கண்ணை செதுக்கி..                      

 கை..கால்கள் செதுக்கி.. 

வைத்துச் செய்ததனால்

வாங்கிய அடிகள் கோடி!


உளி அடிகள் பட்தனால் 

ஒரு அடிக்கே நீ விழுந்தாய். 

காலில் மிதிப்பட்டாய்..

கதையினை கூற வந்தாய்!


உளி கொடுத்த வலியேற்றேன்..

வழிபடும் சிலையானேன்!

வலி ஏற்றதாலே நான்

வாழ்வு பெற்றேன்!

வாழ்க்கைப் பாடம் இது!

வையகம் உணர்ந்திடுமோ!


இரண்டு கற்கள் பேசியது..

என் காதால்

 கேட்டதனால்..

கேட்டதையேப் பாட்டாக்கித்

தருகின்றேன் ஏற்பீரோ!


வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%