ஒவ்வொரு முறை உன்னைச் சந்திக்கும் போதும்,
கண்டிப்பான ஒரு நீதிபதியின் முன்னே
நிற்பது போன்றே உணர்கிறேன்!
வாதி - பிரதிவாதி வாதங்களைக் கேட்காமலேயே
ஒவ்வொரு முறையும் தீர்ப்பளிக்கிறாய்;
உன் விழி எனும் சட்டப் புத்தகத்தின் முன்னே
என் சிறைக்கதவுகள் தானாகவே மூடிக்கொள்கின்றன!
வெளியேற வேண்டுமென்ற ஆசை இருந்தாலும்,
ஏனோ அது எனக்குள்ளேயே முடங்கிப் போகிறது.
உன் இதயம் எனும் நீதிமன்றத்தில்
பல மணி நேர விவாதங்கள் நடக்கின்றன;
ஆனால் தீர்ப்பு என்னவோ, நான் எதிர்பார்த்தபடி
மீண்டும் மீண்டும் நான் 'ஆயுள் கைதி' என்பதுதான்!
விடுதலை வேண்டித்தான் உன்னிடம் வருகிறேன்...
ஆனால் உன் இதழோரம் ஈரமும் இல்லை,
உன் இதயத் துடிப்பில் எனக்கான இரக்கமும் இல்லை!
மீண்டும் மீண்டும் என்னை உனக்குள்ளேயே
அடைக்கலம் புகச் செய்கிறாய்.
இப்படிப்பட்ட தருணங்கள்தான் காதலை உருவாக்கியதோ
என்று நான் எண்ணியிருந்தேன்...
ஆனால் நீ இங்கே காதலை மட்டும்தான் உருவாக்கியிருக்கிறாய்,
காதலியை அல்ல என்பது இப்போது புரிகிறது!
என்னைச் சிறைபிடிக்க மட்டும்
ஏன் காதலை ஆயுதமாகக் கையாளுக்கிறாய்?
ஒன்று, உன் உள்ளத்துக்குள் என்னைப் பத்திரப்படுத்து;
இல்லை எனில், என்னை வானில் சுதந்திரமாகப் பறக்கவிடு!
--
ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?