காலச்சூழலுக்கு ஏற்ப திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” - மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை
சென்னை: மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை வழங்கினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 46-வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஆளுநர் பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். பிஇ, பிடெக்., எம்இ, எம்டெக். உள்ளிட்ட படிப்புகளில் 1 லட்சத்து 50,595 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: நாம் அடைவதை விரும்புவதும் வெற்றிதான். பள்ளிக்காலம் தொட்டு நான் விரும்பியவை எனக்கு கிடைக்கவில்லை. கிராமத்து அரசு பள்ளியில் படித்தேன். எனக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியில் சேர ஆசை. ஆனால், இஸ்ரோவில் செயற்கைக்கோள் திட்டத்தில் பணி கிடைத்தது. விரும்பிச் செய்ததால், நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலத் திட்டத்துக்கு தலைமை தாங்கி வழி நடத்தினேன். நாம் விரும்புவது கிடைக்காவிட்டாலும் கிடைப்பவற்றை விரும்பிச் செய்தால் அதுவும் வெற்றிதான்.
எனவே கிடைக்கின்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். விண்வெளித்துறை சாதனையாளர்களில் 90 சதவீதம்பேர் அரசு பள்ளியில் அதுவும் தமிழ்வழியில் படித்தவர்கள் தான். மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உலகப் பொருளாதார மன்ற ஆய்வின்படி 2030-க்குள் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் காணாமல் போகும். அதேநேரம் அதே அளவுக்கான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். எனவே, புதிய பணிகளுக்கு நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு கூறினார்.
முன்னதாக, பல்கலைக்கழகஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், உயர்கல்வித் துறையின் செயலருமான பொ.சங்கர் பேசும்போது, “அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத்தரத்துக்கு மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1,380 கோடிவழங்கியுள்ளது” என்றார்.
விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் வி.குமேரசன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.சக்திவேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கலந்துகொண்டனர். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இணைவேந்தரும், உயர்கல்வி அமைச்சருமான கோவி.செழியன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.