குடியரசுத் தலைவர் உரையின்போது விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மன்னிப்பு கேட்க அமைச்சர் வலியுறுத்தல்
Jan 30 2026
19
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விபி ஜி ராம் ஜி சட்டம் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே திரவுபதி முர்மு தொடர்ந்து உரையாற்றினார். இருந்த போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவர் அவையில் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ”குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் சரியல்ல. அவர்கள் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தி விட்டனர். இந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் செயலில் ஈடுபடலாமா?” என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?