“அப்பா… நாளைக்குள்ளார காலேஜ் ஃபீஸ் கட்டணும். இல்லேன்னா ஹால் டிக்கெட் கிடைக்காது…” மகளின் குரல் தொலைபேசியில் நடுங்கியது.
அந்த நடுக்கம், அவனுக்குள்ளும் புகுந்தது. "கட்டிடலாம்மா…” என்றான். கையில் இருந்தது வெறும் இருநூறு ரூபாய். காலேஜ் ஃபீஸ் ஐயாயிம்.
அவன் தொழில்? சர்க்கஸ் கோமாளி.
மாலை ஆறு மணி. வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டன.
கூடாரத்தின் வெளியே பஞ்சு மிட்டாய், மிளகாய் பஜ்ஜி வியாபாரம் களை கட்டியிருந்தது.
உள்ளே, சிரிக்கத் தயாரான மக்கள்.
அவன் கண்ணாடி முன் நின்றான்.
முகத்தில் வெள்ளைப் பூச்சு. உதட்டில் சிவப்பு வளைவு. அது சிரிப்புக்காக அல்ல, மகளின் கல்விக்காக.
“ஏய் கோமாளி! ரெடியா?” மேனேஜரின் குரல்.
“ரெடிதான்…”
மேடை ஆரம்பமானது. எடுத்த எடுப்பில் வழுக்கி விழுந்தான்.
கூட்டம் கை கொட்டிச் சிரித்தது.
மீண்டும் எழுந்து பின்புறம் தட்டினான்.
மீண்டும் சிரிப்பு வெடித்தது.
அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
“இந்த சிரிப்புக்கு விலை இருக்கிறது…
ஆனால் என் மகளின் கனவுக்கு?”
ஒரு குழந்தை சிரித்தபடி அவனை நோக்கி விரல் நீட்டியது. அங்கு மகளின் முகம் தெரிந்தது அவனுக்கு.
மகள் நினைவு வந்ததும், இன்னும் பெரிதாய் காமெடி செய்தான்.
மீண்டும் விழுந்தான். மீண்டும் சிரிக்க வைத்தான்.
இன்று அவன் பர்ஃபாமென்ஸ் மற்ற சர்க்ஜஸ் கலைஞர்களைப் பின்னுக்குத் தள்ளியது.
கூட்டம் அவனையே திரும்பத் திரும்பக் கேட்டது.
நிகழ்ச்சி முடிந்தது. அவன் வியர்வையோடு மேனேஜரை அணுகினான். "சார்… கொஞ்சம் அட்வான்ஸ்…”
மேனேஜர் கணக்குப் புத்தகத்தை மூடினார். ''அடேய் கோமாளிப்பயலே... இன்று நல்ல கலெக்ஷன். இந்தா வாங்கிக்கோ... ஐயாயிரம்....நாளையும் இப்படியே கலக்கணும்.. என்ன?.”
அவன் கையில் பணம். கண்களில் நீர்.
முகத்தில் சிரிப்பு பூச்சு.
''இன்று நான் எதுவும் செய்யலை...
என் மகளின் எதிர்காலம் என்னைச் செய்ய வைத்தது.”
ஆம்!.... கோமாளிகளின் மறுபக்கத்தில்
சோகங்களும், கண்ணீருமே நிரந்தரம்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?