தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வருகிற 26, 27-ந் தேதிகளில் சென்னை வருகை

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை   தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வருகிற 26, 27-ந் தேதிகளில் சென்னை வருகை



தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சென்னை வருகிறார். அவர் வருகிற 26, 27-ந் தேதிகளில் தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.


தமிழக சட்டபைக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருந்தப் பணிகள்(எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகின்றன. கடந்த அக்டோபர் 27ந் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருந்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.


அவர்களில் இடம் மாறிச் சென்ற வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான வாய்ப்பளிக்கப்பட்டு, இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 23-ந் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகளை மதிப்பீடு செய்யவும், சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்வதற்கும் இந்திய தேர்தல் கமிஷனில் இருந்து துணை கமிஷனர்கள் சென்னைக்கு வந்து கடந்த 12, 13ந் தேதிகளில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர்.


அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு அறிக்கை அனுப்பினர்.


அசாமில் ஆய்வு பணி


பொதுவாக தேர்தல் நடப்பதற்கு முன்பு தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் கமிஷனர்கள் அடங்கிய குழு, அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு மற்றும் தேர்தல் தயார் நிலை பணிகளை மதிப்பீடு செய்வது வழக்கம் அந்த வகையில் அசாமில் கடந்த 2 நாட்கள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷகுமார் தலைமையிலான குழு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.


அடுத்ததாக தமிழ்நாட்டில் தேர்தல் தயார் நிலை பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் வருகிற 25-ந்தேதி சென்னை வருகிறார். அவருடன் கமிஷனர்கள் சுகபிர்சிங் சாந்து, விவேக் ஜோஷி வருகின்றனர்.


சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றனர்.


முதலில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் சில அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து 26ந் தேதி காலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.


அதைத் தொடர்த்து அன்று மாலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வருமான வரித்துறை, சுங்கத்துறை போன்ற விசாரணை முகமைகள், ரெயில்வே, துணை ராணுவம், அஞ்சல், சிவில் விமான போக்குவரத்துறை போன்ற 20-க்கும் மேற்பட்ட துறையின் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.


தேர்தல் முன்னேற்பாடுகள், ஆயத்தப் பணிகள் பற்றி இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதிகப் பணம், பரிசுப் பொருட்களை கொண்டுச் செல்பவர்களிடம் அவற்றை பறிமுதல் செய்வது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை கண்காணித்து தகவல் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை தலைமை தேர்தல் கமிஷனர் வழங்குவார்.


27ந்தேதி காலை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் கமிஷனர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.


அன்று பிற்பகல் தமிழகத்தின் அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்து தமிழகத்தில் நிலவும் சட்டம்-–ஒழுங்கு பிரச்சினைகள், பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு தடுப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிப்பார்.


இந்த ஆலோசனை கூட்டங்களில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்புப் பணிகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமரா வசதிகள், வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு வசதிகள், கட்டுப்பாட்டு அறை அமைத்தல், வசதிகள், வயதான மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வசதியாக செய்யப்பட வேண்டிய சாய்தளம், சங்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.


அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு அன்றிரவு அவர்கள் டெல்லி செல்வார்கள். அதன் பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடத்தும் தேதியை முடிவு செய்வார்கள். அனேகமாக வரும் மார்ச் மாதத்தின் முதல் வார இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%