அன்றைய தினம் தமிழாசிரியர் சீனி வாசன் என்கிற சீனி வாத்தியார் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு ஆகியிருந்தது. மேடையில் நடு நாயகனாக சீனி வாத்தியார் அமர வைக்கப்பட்டார். வலது புறம் தலைமை யாசிரியர் சில ஆசிரியர்கள், மற்றும் இடது புறம் சில ஆசிரியர்களும் அமர்ந் திருந்தனர்.
அனைவரும் பேப்பர் தட்டில் தரப்பட்ட ஸ்வீட், கார வகைகளை சாப்பிட்டனர் .
பிறகு, ஒவ்வொருவராக எழுந்து நின்று சீனி வாத்தியாரைப் பற்றி பெருமையா கப் பேசினார்கள். தமிழ் மொழிக்கெ ன்றே அவதாரம் எடுத்தவர், இலக்கணப் பிழையின்றி பாடம் சொல்லிக் கொடு ப்பவர், சரளமாக கவிதைகளை வடிப்பதில் வல்லவர், அவரால் தமிழ் பாடத்தில் மாணவர்களை நிறைய மதிப்பெண் எடுக்க வைத்தது ஒரு பெரிய சாதிப்பு, காலியான அவர் இடம் யாராலும் நிரப்ப முடியாது என்றெல் லாம் வாத்தியாருக்கு புகழாரம் சூட்டினர். கேட்ட சீனி வாத்தியாருக்கு நெகிழ்ச்சியில் கண்கள் பனித்தன.
கடைசியில் சீனி வாத்தியார் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். பின் ட்ராப் சைலன்ஸ் ! பேசிக் கொண்டே வந்தவர், கடைசியில் " ஆகவே மாணவ மணிகளே ! நான் இல்லாமல் போனா லும் வேறு தமிழாசிரியர் வருவார். அவரும் நன்றாகப் பாடம் நடத்துபவராக இருப்பார். அவருக்கும் நீங்கள் முழு ஒத்துழைப்பைத் தரவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் நம் தாய் மொழி. உங்கள் தாயை நேசிப்பது போல் தமிழையும் விடாமல் நேசியு ங்கள். ஏனென்றால் தமிழ் உங்கள் உயிர் மூச்சு ! “என்று பேசி முடித்து இருகரம் குவித்து வணங்கினார். கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது !
மேடையில் இருந்த தலைமையாசிரியர், மற்றும் சக ஆசிரியர்களும் சீனி வாத்தி யார் கை பிடித்துக் குலுக்கினார்கள். சிலர் அவரை தங்களோடு சேர்த்து அணைத்துக் கொண்டனர். அந்த அணைப்பில் நட்பின் வலிமையைப் புரிந்து கொண்ட சீனி வாத்தியாரின் கண்கள் கலங்கி விட்டன. முன்னால் குழுமியிருந்த மாணவர்களைப் பார்த்து கையசைத்தார். மாணவர்களும் மரியா தை நிமித்தம் எழுந்து நின்று பதிலுக்கு கையசைத்தார்கள்.
வெளியே வந்ததும் சிறிது நேரம் நின்ற படியே பள்ளிக்கூடத்தை கண்ணாற பார்த்தார். கண்களைத் துடைத்துக் கொண்டார். நாளையிலேர்ந்து பள்ளிக் கும் தனக்கும் இனி சம்பந்தமில்லை என்கிறநினைப்பு அவர் நெந்சைச் சுட்டது.
வாடகைக் காரில் அவரைக் கொண்டு போய் வீட்டில் சேர்த்தார்கள் சில ஆசிரியர்கள். அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுக்கப்பட்டது. கொஞ்ச நேரம் சீனி வாத்தியா ரிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் கடைசியில் ஒவ்வொருவராக அவர் கை பற்றி குலுக்கி விட்டுச் சென்றனர்.
எல்லோரும் போன பிறகு, ஈ.ஸி. சேரில் சாய்ந்து கொண்டிருந்த வாத்தியார் அருகில் வந்து நின்றான் அவரின் ஒரே மகன் சீதாராமன். நீண்ட நாள் கழித்துப் பிறந்தவன். கூடவே அம்மா பார்வதியும் அருகில் சென்று நின்று கொண்டாள். கணவரை கண் சிமிட்டாமல் பார்த்தாள். முப்பத்தாறு வருடங்கள் உழைப்பின் அடையாளமாக உடல் சோர்ந்து போய் இருப்பது தெரிந்தது. பரிவும் பச்சா த்தாபமும் ஏற்பட்டது.
" என்னப்பா ! செண்ட் ஆஃப் பார்ட்டி படு அமர்க்களம் போல இருக்கு ?பரவா யில்லை,நல்ல மரியாதையோடு வீட்டில் உங்களைக் கொண்டு வந்து விட்டார் கள். “ என்றவன், “ ஏம்பா, பார்ட்டிக்கு அம்மாவையும் அழைத்திருக்கலாமே ? விழாவை ரசித்திருப்பாங்க!”
" கூப்பிட்டேன், உங்கம்மாதான் ‘ வெட்க மாயிருக்கு, வரமாட்டேன்'னு சொல் லிட்டா…அது சரி, உன் நேர் முகத்தேர்வு என்னாச்சு? செலக்ட் ஆனையா,இ்ல்லை யா ?" கேள்வி கேட்ட மகனைப் பார்த்து எதிர் கேள்வி கேட்டார் சீனி வாத்தியார்.
" ஆயிட்டேன் அப்பா ! இதோ அப்பா யிண்ட்மென்ட் ஆர்டர்!" என கையில் தயாராக வைத்திருந்த ஆர்டரை நீட்டினான் சீதாராமன்.
ஆர்டரை வாங்கிப் பார்த்து முகம் சுருக்கியவர். " என்னடா இது ! தமிழாசிரியர் போஸ்ட்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க?" என கேட்டார் சீனி வாத்தியார்.
" அப்பா, ஆங்கிலம், கணக்கு, தமிழ்னு மூணு வாத்தியார் போஸ்டுக்கு நேர் முகத் தேர்வு வெச்சாங்க. நான் தமிழ் வாத்தியாரா செலக்ட் ஆயிட்டேன். ஒரு தமிழ் ஆசிரியர் மகன் தமிழ் ஆசிரியரா கக்கூடாதா ? உங்களுக்குத்தானப்பா பெருமை !"
‘ ம்..பெருமைதான். ஆனால் நம்மப் பரம்
பரையே தமிழ் வாத்தியார் வேலை பார்
த்தாச்சு. நீயாவது ஆங்கிலத்திலோ
அல்லது கணக்குலயோ வாத்தியார் வேலைக்குப் போகலாமேன்னு ஒரு ஆதங்கம் அவ்வளவுதான் !’ மனதில்
நினைத்துக் கொண்டார் பள்ளி பிரிவு உபசார விழாவில் ' தமிழை நேசியு ங்கள்; தமிழ் உங்கள் மூச்சு !' என்று புகழ் பாடிய சீனி வாத்தியார்.

வி.கே.லக்ஷ்மிநாராயணன்