தென்காசி மாணவி பிரேமாவுக்கு வீடு கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை

தென்காசி மாணவி பிரேமாவுக்கு வீடு கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை

சென்னை, செப்.27-


மனக்குறையை வெளிப்படுத்திய 24 மணி நேரத்தில் தென்காசி மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கல்வியில் சாதித்த மாணவர்கள் தமிழக அரசை பாராட்டியும் பேசினார்கள்.


அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தில் உதவி பெற்ற தென்காசி மாணவி பிரேமா, தனது முதல் மாத சம்பளத்தை மேடையில் தன் அப்பாவிடம் கொடுத்தார். இது அனைவரையும் கண்கலங்க வைத்தது.


தொடர்ந்து பிரேமா பேசுகையில், “பெண் பிள்ளையை எதுக்கு படிக்க வைக்கிறீங்க, படிச்சி என்னவாகப் போகுது என்று ஊர்ல எல்லோரும் என் அப்பாவிடம் கேட்பாங்க. பொண்ணு சொந்த காலில் நிற்கவேண்டும் என்பதற்காக என் அப்பா பல தடைகளைத் தாண்டி என்னைப் படிக்க வச்சாங்க. நான் விடுதியில் தங்கி படித்த சமயத்தில் மழை பெய்யும்போது பாதுகாப்பாக இருப்பதை உணர்வேன்.


ஆனால் அப்போது எனது ஓட்டு வீட்டை பற்றிதான் நான் யோசித்துக் கொண்டே இருப்பேன். மழை பெய்தால் வீட்டில் ஒழுகுமே. அம்மா, அப்பா இப்போது என்ன செய்வார்களோ என்றுதான் எனது மன ஓட்டம் இருக்கும். அம்மா, அப்பாவுக்கு நல்ல வீடு கட்டி கொடுத்து விடவேண்டும் என்று நினைச்சிட்டே இருப்பேன்” என்று கண்ணீர் மல்க உணர்ச்சி பொங்க கூறினார்.


இந்த நிலையில் மாணவி பிரேமா தனது மனக்குறையை தெரிவித்த 24 மணி நேரத்தில் அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.


இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-


ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்கு ‘கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%