நமக்கு தெரியாத விஷயங்கள்..!

நமக்கு தெரியாத விஷயங்கள்..!


முள்ளிவாய்க்கால் என்னும் ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக நான்கு பேர் வந்தார்கள். அவர்கள் முனிவரிடம் உலகத்தை புரிஞ்சிக்கவே முடியலயே அதற்கு என்ன வழின்னு கேட்டார்கள்? அதற்கு அந்த முனிவர் தெரியலப்பான்னு ஒரு வார்த்தையில் பதில் கூறினார்.


ஆனாலும், முனிவரை விடாமல் வந்தவர்கள், என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறீங்களே! என்று கேட்டார்கள். அதற்கு முனிவர் அவர்களிடம், சரி இப்பொழுது நான் உங்களை ஒரு புஷ்பக விமானத்துல அழைத்துக் கொண்டு செல்கிறேன். அங்கு போற வழியில் ஒரு காட்சியை உங்களுக்கு காட்டுகிறேன். நீங்கள் அதைப் பார்த்து விட்டு உங்களின் கருத்தை சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் கருத்து தவறாக இருந்தால் அந்த விமானம் உங்களை கீழே தள்ளிவிட்டு விடும் என்று கூறினார். 


முனிவர் கூறியதை ஏற்றுக்கொண்டு அந்த நான்கு பேரும் முனிவரோடு சேர்ந்து புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு அங்கு ஒரு இடத்தில் புலி ஒன்று தன் குட்டிகளின் பசிக்கு இரை தேடி சென்றது. அதே இடத்தில் மானும் தன் குட்டிக்கு தண்ணீர் தேடி வந்து கொண்டிருந்தது.


அங்கிருந்த புலி மானைப் பார்த்ததும் திடீரென அதன் மேல் பாய்ந்து அதை கொன்று சாப்பிட்டு தன் குட்டிக்கும் கொடுத்தது. அதை சாப்பிட்டதும் புலியின் குட்டிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், தன் தாயை இழந்த அந்த மான் குட்டிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 


முனிவர் இந்தக் காட்சியை அவர்களுக்கு காட்டி, இதைப் பற்றி உங்களின் கருத்து என்னவென்று கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நான்கு பேரில் ஒருவர், இது ரொம்ப தவறான செயல், மான் குட்டிக்கு இப்பொழுது தாய் இல்லாமல் போய்விட்டது என்று கூறினார். உடனே அவரை அந்த விமானம் கீழே தள்ளிவிட்டது. 


இன்னொருவரிடம் முனிவர் ஏம்பா உன் கருத்து என்னன்னு? கேட்டார். ஏற்கனவே ஒருவர் கீழே விழுந்ததை பார்த்த அவர், இல்லை இது சரிதான், ஏனென்றால் புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள் உள்ளது என்று கூறினார். உடனே அவரையும் விமானம் கீழே தள்ளி விட்டது.


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்றொருவர் ரொம்ப உஷாராக, இது தவறும் இல்லை, சரியும் இல்லை என்றார். உடனே விமானம் அவரையும் கீழே தள்ளிவிட்டது. கடைசியாக விமானத்தில் இருந்தவரைப் பார்த்து முனிவர் ஏம்பா உன் கருத்து என்னன்னு கேட்டார். அதற்கு அவர், தெரியலயே சாமின்னு, சொன்னார். இந்த முறை விமானம் இவரை கீழே தள்ளி விடவில்லை. அவர்கள் இருவரும் விமானத்தில் பயணம் செய்தனர். 


நீதி : 


நமக்கு தெரியாத விஷயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறது அனாவசியமானது. அதனால், தெரியாத விஷயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் சிறந்தது.

 

Thanks and regards 

A s Govinda rajan 

 


கடவுள் கற்றுக் கொடுத்த பாடம்.!


ஒரு ஊரில் ரமேஷ் என்பவர் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகமாக இருந்தது. அதனால் அவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவார். பிறகு காட்டிற்கு விறகு வெட்ட சென்று விடுவார். வெட்டிய விறகை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவார்.


ஓரளவிற்கு அதில் வரும் வருமானத்தை வைத்து நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தார். ஒரு நாள் இதுபோல அவர் காட்டிற்கு செல்லும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் இரண்டுமே இல்லை. ஏதோ விபத்தில் இழந்துவிட்டது போல இருந்தது. அது தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த அவருக்கு மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை, அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.


இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த வழியில் ஒரு புலி வந்தது. அதை பார்த்த உடனே அவர் ஓடிச் சென்று ஒரு மரத்திற்கு பின்புறமாக ஒளிந்து கொண்டார். அங்கு ஒளிந்து கொண்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பித்தார். 


அந்த புலி, ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துக்கிட்டு வந்து, அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டது. புலி சென்ற பின்பு கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கொண்டே வந்து மிச்சம் இருந்ததை சாப்பிட்டது. இதையெல்லாம் மரத்திற்கு பின்னாடி நின்று ரமேஷ் பார்த்துக் கொண்டிருந்தார்.


பிறகு அவர் யோசித்து பார்க்கிறார். இரண்டு காலும் இல்லாத ஒரு நரிக்கே கடவுள் சாப்பாடு அளிக்கிறார். அப்படி இருக்கும் பொழுது தினமும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் எனக்கு சாப்பாடு போடாம விடுவாரா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் உள்ளது. நாம எதுக்கு தேவையில்லாம வெயிலில் கஷ்டப்படனும்? எதுக்காக வியர்வை சிந்தி விறகு வெட்டனும்...? என்று யோசிக்க ஆரம்பித்தார்.


அதற்கு பிறகு அவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டுவதை நிறுத்திவிட்டார். கோடாரியை தூக்கி எறிந்துவிட்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். ஆனால், கோவிலுக்கு மட்டும் சென்று வருவார். கடவுள் நம்மை காப்பாற்றுவார், அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் என்று நம்பி கண்ணை மூடிக்கொண்டு கோவில் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் சாய்ந்து கொண்டு இருந்தார். 


இப்படியே இரண்டு நாட்கள் ஆனது. ஆனால், சாப்பாடு வந்த பாடில்லை! அவர் பசியால் வாடி போனார். உடம்பும் இளைத்து போனது. எலும்பும் தோலுமாக ஆனார். ஒரு நாள் இரவு நேரம் கோவிலில் யாருமே இல்லை. அவர் மெதுவாக கண்ணை திறந்து கடவுளை பார்த்தார்.


ஆண்டவா... என்னுடைய பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா..? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? காட்டுல அந்த நரிக்கு மட்டும் புலி மூலமாக சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே நானும் இங்கே வந்தேன்... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே... இது நியாயமா? என்று கேட்டான். 


பிறகு கடவுள் மெதுவாக கண்ணை திறந்து முட்டாளே! நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து இல்லை! புலியிடம் இருந்து என்று கூறினார். 

 

Thanks and regards 

A s Govinda rajan 



புறம் பேசாதீர்கள்..!


மகரிஷி ஒருவர் காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவர் தவத்தின் போது கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்னவென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். மகரிஷி கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். அதனை மகரிஷி உண்பார். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினார்கள்.


ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தார். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரைப் போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தார். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். அதைப் பார்த்ததும் மன்னன் சிரித்தப்படியே அங்கிருந்து சென்றுவிட்டார்.


மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அந்த முனிவர், மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உன்னையே உண்ண வைப்பார்கள். அதற்கு நீ தயாராக இரு! என்று கூறி விட்டு சென்றுவிட்டார். 


அதைக் கேட்டதும் மன்னன் அஞ்சி நடுங்கினார். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருத்தப்பட்டார். அதனால், தான, தர்மங்கள் செய்து தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தார். அதற்காக, அரண்மனையின் நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினார். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்திற்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதால் ஏற்படும் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பினார். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.


ஆனால், அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறு மாதிரியாக கதை கட்டி விட்டனர். மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறார். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறார் என்று தவறாக கூறினர். ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்? எனக் கேட்டான். அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு என்று அவள் கூறினாள்.


அதற்கு அவளது கணவன், தானம் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா? என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாய் மேல் கை வைத்து, பின் மெதுவாக தன் கணவனிடம் சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 


இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தார். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவர் உண்பதற்காக தயாராக உள்ளது. அந்த விஷயம் மன்னனுக்குத் தெரிந்ததால், அந்த பாவ மலையை கரைக்க வேண்டும் என்பதற்காக, கன்னியருக்கு தான, தர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறார். ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவருக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர்.


கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும், அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள் என்று கூறினாள்.


தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக்கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்திற்கும் புறம் பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

 

Thanks and regards 

A s Govinda rajan 

 


அறிவுடையோர்..!


ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அறியாமல் அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். அங்கு இருக்கும் ஒரு அரக்கன் கோபமடைந்து, அவரைப் பார்த்து யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா? என்றான்.


தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்! என்றார். இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை! என்று அந்த அரக்கன் கூறிவிட்டு, அடுத்த கணம், அந்தக் அறிஞரை குரங்காக மாற்றிவிட்டான்.


அவர் மிகவும் வருத்தத்துடன் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் சாப்பிட்டார். பிறகு அவர் ஒரு நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பக்கத்து பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.


குரங்கை வெளியே அனுப்புங்கள் இல்லை கொன்றுவிடுங்கள்! என்று கத்தினார்கள். ஆனால், கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டு, வேண்டாம் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.


அந்தக் குரங்கு கப்பலின் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. அவர்கள் செல்லும் நகருக்குள் ஒரு செய்தி பரவி இருந்தது. அங்கு அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. 


அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்! என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது. அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். 


குரங்கும் நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.


எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்? என்றனர். அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வியான, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்காக இருக்காது. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள்.


அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை இளவரசி படித்துள்ளார். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்து அறிஞரை பழைய நிலைக்கு கொண்டுவந்தார். பிறகு அவர் இளவரசிக்கு நன்றியுடன் இருந்தார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.


நீதி :


அறிவுடையோர் எந்த உருவத்தில் இருந்தாலும் மதிக்கப்படுவார்கள்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


மனக்கவலையை எப்படி களைவது?


குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன், குருவே! சில நேரங்களில் மனதில் எழும் மனக்கவலையை எப்படி களைவது? என்று கேட்டான். அவனைப் பார்த்த குரு, இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன் என்று கூறி கதையைத் தொடர்ந்தார்.


ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக இருந்தன. அவற்றில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் இருந்தது. ஒரு நாள் அந்தக் குட்டிக் குரங்கு, தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பாம்பு ஒன்றைப் பார்த்தது. நெளிந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாக சென்று அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து விட்டது.


பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால், எந்தக் குரங்கும், குட்டி குரங்கிற்கு உதவ முன்வரவில்லை.


ஐயயோ.. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு போல. இது கடித்தால் உடனே மரணம்தான் என்றது ஒரு குரங்கு. மற்றொரு குரங்கு, குட்டிக் குரங்கு தனது பிடியை விட்டதுமே, பாம்பு அதனைக் கடித்துவிடும். பாம்பிடம் இருந்து இது தப்பிக்கவே முடியாது என்றது.


இப்படியே ஒவ்வொரு குரங்கும், குட்டியின் பீதியை அதிகரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டன. தன்னுடைய கூட்டமே, தன்னை கைவிட்டுவிட்டதால், விரக்தியின் உச்சத்தில் இருந்தது குட்டிக் குரங்கு. 


எந்த நேரமும் கடிக்கத் தயாராக சீறிக்கொண்டிருக்கும் பாம்பைப் பார்த்து பயந்தப்படியே, தன் பிடியை விட்டுவிடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டது. மரண பயம் அந்தக் குரங்கை வாட்டி வதைத்தது. புத்தி கெட்டுப் போய் இந்தப் பாம்பை கையால் பிடித்துவிட்டேனே என்று பெரிய குரலெழுப்பி புலம்பியது. 


நேரம் கடந்து கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் குரங்கின் உடல் சேர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கே சென்றுவிட்டது. கண்கள் இருளத் தொடங்கின. அந்த நேரம் பார்த்து ஒரு ஞானி அந்த வழியாக வந்தார். சொந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், இந்தத் துறவி நம்மைக் காப்பாற்றுவார் என்று அந்த குட்டிக் குரங்கு நினைத்தது. அதற்கு கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது.


குட்டியின் அருகில் வந்த துறவி, எவ்வளவு நேரம்தான் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே கஷ்டப்படப் போகிறாய்? அதைக் கீழே போடு என்றார். குரங்கோ, சுவாமி! நான் பாம்பை விட்டு விட்டால், அது என்னைக் கொன்றுவிடுமே என்றது.


அதற்கு துறவி, பாம்பு செத்து ரொம்ப நேரமாகிவிட்டது. அதை கீழே வீசு என்றார். அவரது வார்த்தையைக் கேட்ட குரங்கு, பயத்துடனேயே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது. துறவி சொன்னது உண்மைதான். குரங்கின் இறுகிய பிடியில் நெடுநேரம் இருந்த அந்தப் பாம்பு இறந்து போயிருந்தது. 


அதைப் பார்த்த பிறகுதான், அந்தக் குரங்கு குட்டிக்கு உயிர் வந்தது. பின்னர் அந்தக் குரங்கு, துறவியை நன்றியுடன் பார்த்தது. அவர், இனிமேல் இதுபோன்ற முட்டாள் தனம் பண்ணாதே என்றபடி தன் வழியில் நடந்து சென்றார்.


நம்மில் பலரும் இப்படித்தான், மனக்கவலை என்ற செத்தப் பாம்பை, கையில் பிடித்து வைத்துக்கொண்டு, விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். மனதில் இருக்கும் கவலையை விட்டொழித்தால் மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும் என்று குரு கூறினார்.

 

Thanks and regards 

A s Govinda rajan 

 


தந்தையின் நச்சரிப்பு..!


தந்தையின் நச்சரிப்பால் சிவாவிற்கு வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போனது. ஏனென்றால், சிவாவின் தந்தை பேஃனை ஆப் பண்ணாமல் எங்கே வெளியே போகிறாய், ஆளில்லாத அறையில் டி.வி. ஓடுகிறது பார், பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார் என்று இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.


வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் சிவா தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருநாள் சிவாவிற்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்போதுதான் அப்பாவின் நச்சரிப்பு குறையும் என்று எண்ணிக் கொண்டான்.


பிறகு நேர்காணலுக்கு கிளம்பினான். கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல், தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு சிவா வந்து சேர்ந்தான். 


அங்கு நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் அவனை வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே விட்டுப் போயிருந்தார். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த குழாயை கையில் எடுத்து செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.


உள்ளே வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். அங்கு இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது. விளக்கை அணைக்காமல் செல்கிறாயே? என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.


மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த சிவாவிற்கு ஒரே திகைப்பு. நமக்கு இங்கு வேலை கிடைக்குமா? என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் ஹாலில் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் வெல்கம் என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.


ஹாலில் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் வீணாக சுற்றிக் கொண்டிருந்தன. யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது? என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் அமர்ந்தான்.


சிவா கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். உடனே நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்? என்று கேட்டார். இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல் குழம்பி நின்றான். 


கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞருமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.


அப்பாவின் பேச்சு எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். ஆனால், அந்த ஒழுங்குமுறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் மீதுள்ள எரிச்சல் இப்போது சுத்தமாக தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சிவா சந்தோஷமாக வீடு திரும்பினான். 


நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், உளி போன்று வார்த்தைகளால், கட்டுப்படுத்துவதால் தான், சில நேரம் வில்லனாக நமக்கு தெரிகிறார் தந்தை. 

 


 Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai 

600024

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%