பலுசிஸ்தானில் 216 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாகிஸ்தான் ராணுவம் தகவல்

பலுசிஸ்தானில் 216 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாகிஸ்தான் ராணுவம் தகவல்


 

இஸ்லாமாபாத்,


பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய மாகாணம் பலுசிஸ்தான். அங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும், பலுச் விடுதலைப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அந்த வகையில், கடந்த ஜனவரி 26-ந்தேதி பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ‘ஆபரரேஷன் ராட்-உல்-பிட்னா’ என்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கினர். அதன்படி முதற்கட்டமாக பன்ஜ்குர் மற்றும் ஹர்னாய் ஆகிய மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.


அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த தாகுதலில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.


இந்த நிலையில், ‘ஆபரரேஷன் ராட்-உல்-பிட்னா’ தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 216 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 36 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, “இந்தியாவின் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத குழுக்கள் பலுசிஸ்தானில் பிராந்திய அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க முயல்கின்றன" என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%