விழுப்புரத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ஷேக் அப்துல் தொடங்கி வைத்தார்
விழுப்புரம், ஜன.–
விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு 1.1.2026 முதல் 31.1.2026 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்” அனுசரிக்கப்படு கிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில், 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சாலையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும். வாகன ஓட்டிகள் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் இயக்கும்போது சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனத்தை பயன்படுத்தும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல், பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலை குறியீடுகளையும், விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுக்க முடியும் என்றார்.
இதில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவோம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், சாலை விதிகளை கடைபிடிப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியானது மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் இருந்து தொடங்கி நான்குமுனை சந்திப்பு வழியாக மாம்பழப்பட்டு சாலை, ரெயில்வே கேட் வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது.