வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்ம கும்பல்: துப்பாக்கியை காட்டி விரட்டியடித்த இந்தி நடிகர் கோவிந்தா
பிரபல இந்தி நடிகர் கோவிந்தா மும்பை ஜூகு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டை மர்ம நபர்கள் சுற்றி வளைத்ததுடன் உள்ளே நுழைய முயன்றதாகவும், அவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடித்ததாகவும் ஊடகங்களுக்கு நடிகர் கோவிந்தா அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சமீபத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எனது வீட்டை சுற்றி மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்தேன். ஜன்னல் வழியாக பார்த்த போது, சுமார் 22 முதல் 23 பேர் கொண்ட கும்பல் எனது வீட்டை முற்றுகையிட்டிருந்தது. அவர்களில் ஒருவன் துணிச்சலாக எனது வீட்டின் மொட்டை மாடி வரை ஏறிவிட்டான். இதைக்கண்டு நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நான், உடனடியாக எனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்துச்சென்று அவர்களை எச்சரித்தேன். அதே நேரத்தில், ஆதாரத்திற்காக அங்கு நடந்தவற்றை எனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அவர்களிடம் கேட்டபோது, மின்சார பழுதுபார்ப்பு பணியாளர்கள் என்று முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். நள்ளிரவில் ஏன் மொட்டை மாடியில் ஏறினீர்கள்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.
உடனடியாக உதவி கோரி மும்பை போலீசாரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், அவர்கள் எனது அழைப்பை ஏற்கவில்லை. வேறு வழியின்றி, அந்த கும்பலை உரிமம் பெற்ற துப்பாக்கியை காட்டி அங்கிருந்து விரட்டியடித்தேன். கடந்த சில நாட்களாகவே எனக்கு மிரட்டல்கள் வந்தன. எனது நடமாட்டத்தை கண்காணிப்பது போல உணர்ந்தேன். இது திட்டமிட்ட தாக்குதல் முயற்சியாக இருக்குமோ என எனக்கு தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ஜூகு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கோவிந்தா வழங்கிய வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி அந்த கும்பலை தேடும் பணியில் போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?