தமிழக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

தமிழக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

சென்னை, செப்.3-


அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அமல்படுத்தி உள்ளார். இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் திருப்பூரில் மட்டும் ஜவுளித்துறையில் ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


இந்த நிலையில் சென்னைக்கு வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார்.


அப்போது ஜவுளித்துறையை சேர்ந்த பிரதிநிதிகள் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ஜவுளி தொழில் சந்தித்துள்ள பின்னடைவு குறித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இது தொடர்பாக மனுவையும் அளித்தனர். அப்போது தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.


இந்த கூட்டம் தொடர்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட ‘எக்ஸ்' பதிவில் கூறியிருப்பதாவது:-


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 28 சதவீதம் ஜவுளி பொருட்கள் அடங்கும். எனவே வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளித்துறைக்கு அவசர கால நிவாரணமாக ஏற்றுமதி ஊக்கத்தொகை, தொழில் முதலீட்டு மற்றும் ஜி.எஸ்.டி. வரி சலுகை போன்றவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து செயலாற்றி வருகிறது என்றும், ஏற்றுமதியாளர்கள் விரைவில் நல்ல தீர்வை எதிர்ப்பார்க்கலாம் என்றும் உறுதி அளித்தார்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு டெல்லி செல்ல விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறுகையில், அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி விதிப்பு தொடர்பாக ஏற்றுமதி நிறுவன சங்கங்கள் சார்பில் என்னை சந்தித்து பேசினார்கள். கொரோனா காலத்தில் மக்கள் தொழிலில் பாதிக்கக்கூடாது என்ற விதத்தில் ‘எமர்ஜென்சி கிரெடிட் கேரண்டி லிக்விடிட்டி ஸ்கில்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தொழில் செய்பவர்களுக்கு உதவியாக இருந்தது. தொழில்கள் மூடப்படாமல் சிறப்பாக செயல்பட்டது. அதுபோல் அமெரிக்காவின் 50 சதவீத வரியால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஆலோசனை செய்து வருகிறோம். ஏற்றுமதி செய்பவர்களுக்காக விரைவில் நல்ல முடிவு வரும். அமெரிக்காவால் நஷ்டம் அடைபவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%